திருச்சி, வயலூர் முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும், இதன் பாதுகாப்பு பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி, பாதுகாப்பு காரணம் கருதி கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த சூழலில், திருச்சி ஜீயபுரம் டி.எஸ்.பி பழனி, கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்திருந்த பக்தரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். குறிப்பாக, வரிசையில் வராததால் அந்த பக்தரை திட்டியதாக கூறப்பட்டாலும், பொதுமக்கள் முன்னிலையில் குடும்பத்தினருடன் வருகை தந்த பக்தரை இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்.ஐ. சுமதி, புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை ஆபாசமாக திட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி - க. சண்முகவடிவேல்