திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூர் தெற்கு முத்துக்கருப்பண்ணப்பிள்ளை குளம் பகுதியில் உள்ள பிச்சை என்பவரது கடலை காட்டில் 8 பெண், 7 ஆண் என 15 மயில்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே செத்து கிடந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வனச்சரகர் மகேஷ்வரன் தலைமையிலான வனத்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள்: சட்டம் ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள்: அரியலூரில் ஸ்டாலின் பேச்சு
அப்போது அங்கிருந்த கடலை காட்டில் 21 இடங்களில் தீவனமாக அரிசி வைக்கப்பட்டிருந்ததும், அரிசியை இரையாக உட்கொண்ட மயில்கள் உயிரிழந்தும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மயில்களின் உடல்களை கைப்பற்றிய வனத்துறையினர், பொத்தப்பட்டி கால்நடை மருந்தகத்திற்குக் கொண்டுச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் ரமேஷ் மற்றும் மாரிமுத்து மயில்களுக்கு உடற்கூராய்வு மேற்கொண்டனர். பின்னர் மயில்களின் உடல்கள் முகவனூர் காப்பு காட்டில் புதைக்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-30-at-09.19.39.jpeg)
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர், நில உரிமையாளரான அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த தானியல் மகன் பிச்சை(80)-யை வன அலுவலகம் அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில், பிச்சை தன் நிலத்தில் உள்ள கடலைகளை எலிகள் தின்று விடுவதால் அவற்றுக்கு விஷம் கலந்த அரிசியை வைத்ததாகவும், அதை மயில்கள் திண்றதால் அவை உயிரிழந்துள்ளதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிச்சையை கைது செய்த வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil