scorecardresearch

திருச்சி விவசாய சங்க பிரமுகர் வெட்டிப் படுகொலை; முன் பகை காரணமா? போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விவசாய சங்க பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை; முன் பகை காரணமா? மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Shanmuga Sundharam
விவசாய சங்க நிர்வாகி சண்முகசுந்தரம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம்.ஆர் பாளையம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் கந்தன் மகன் சண்முகசுந்தரம் (வயது 65). இவர் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்டார். இதனை அடுத்து 2-ம் தாரமாக வளர்மதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

எம்.ஆர்.பாளையத்தில் உள்ள சண்முகசுந்தரம் வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வளர்மதி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்திருந்தார். இதனால் சண்முகசுந்தரத்தை வளர்மதி பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சண்முகம் மட்டும் எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். தனியாக வசித்து வந்த சண்முகசுந்தரத்திற்கு அவருடைய அக்கா மூன்று வேலையும் உணவை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம்.

இதையும் படியுங்கள்: பா.ஜ.க-வுடன் கூட்டணியா? உதயநிதி பேட்டியில் மீடியாவிடம் சீறிய கே.என் நேரு

இந்த சூழலில் சண்முகசுந்தரத்திற்கு அவரது அக்கா மகன் ஆனந்த் என்பவர் இன்று காலை உணவு கொடுக்க வந்தபோது வீட்டில் இருந்த மாட்டு கொட்டகையில் சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த ஆனந்த் இதுகுறித்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லால்குடி டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் சண்முகசுந்தரம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் யாரோ சண்முகசுந்தரத்தை வெளியே வரவழைத்து அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரைவழங்கப்பட்டு சம்பவம் இடத்தில் மர்ம நபர்கள் விட்டு சென்ற தடயங்கள் கைப்பற்றி கை ரேகைகளை பதிவு செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாய சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரத்திற்கும் தமிழக ஏரி பாசன விவசாய சங்க மாநில தலைவர் பூவை விசுவநாதன் என்பவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டு இருவரும் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy farmer association functionary stabbed to murdered