தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்தவகையில், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்யும் போது தங்களையும் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்ததால் திருச்சி போலீஸார் அதிர்ச்சியடைந்ததோடு அய்யாக்கண்ணுவை வீட்டுச்சிறையில் அடைத்தனர்.
விவசாயிகளை கன்னியாகுமரி சென்று தியானம் செய்ய விடாமல் தடுத்ததாலும், இலாபகரமான விலை கொடுக்காமல், நதிகளை இணைக்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி கண்டித்து திருச்சி விமான நிலையத்தின் உள்ளே நுழைந்து விமானங்களை மறிக்க முயற்சி செய்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை மாநகர போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
மேலும், அவர்கள் தப்பித்து வெளியே சென்று விடாமல் இருக்க அண்ணாமலை நகரில் உள்ள விவசாயிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தின் நாலாபுரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வீட்டுக்காவலில் விவசாயிகளை சிறை வைத்தனர். இதனால் திருச்சி கரூர் சாலையில் உள்ள அண்ணாமலை நகரில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“