க. சண்முகவடிவேல்
Trichy | Farmers Protest: விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டியும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.8100 வழங்க வேண்டியும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு போராட அனுமதி அளிக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டும், அரை நிர்வாணத்துடனும், சாலையில் படுத்து உருண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற ராமச்சந்திரன், பரமசிவம், நவீன்குமார் உள்ளிட்ட 5 விவசாயிகள் திடீரென அந்தப்பகுதியில் உள்ள செயின் பால்ஸ் காம்ப்ளக்ஸ் மாடியில் ஏறி அங்கு அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரில் உச்சிக்கு சென்று மத்திய அரசுக்கு எதிராக போராட்டக்குரல்களை எழுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து ஒலிபெருக்கி மூலம் கீழே இறங்கக் கோரினர். ஆனால், விவசாயிகல் யாரும் கீழே இறங்க மறுத்து அடம்பிடித்ததால், அங்கு இருசக்கர வாகனத்தில் செல்வோர், பொதுமக்கள் என பலரும் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை வரவழைத்து, சுமூக பேச்சுவார்த்தை நடத்திய கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையிலான போலீசார், செல்போன் டவரில் ஏறி போராடும் விவசாயிகளை கீழே இறங்கக்கூறுமாறு வலியுறுத்தினர்.
இதனையடுத்து அய்யாக்கண்ணு விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்படி விவசாயிகளும் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினர். அதேநேரம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தால் செல்போன் டவரில் இருந்து குதிப்போம் என போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக 5 பேரும் கீழே இறக்கப்பட்டனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு பேசுகையில், "விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதனால், மத்திய பிஜேபி அரசின் மூத்த நிர்வாகள் போராட்ட விவசாயிகளை அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் தீர்வு எட்டப்படவில்லை.
இதனால், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், விவசாயிகள் அறிவித்தபடி தலைநகர் டெல்லியில் இன்று போராட்டம் நடத்த செல்லும் விவசாயிகளை தடுக்க மத்திய பிஜேபி அரசு முள்வேலிகளையும், தடுப்பு சுவர்களையும், இரும்பு தடுப்புகளையும் வைத்து மறிக்கின்றனர். இது ஜனநாயக நாட்டிற்கு எதிரானது, விவசாயிகள் தங்கள் கோரிக்கையை இந்தியாவில் உள்ள எந்த பகுதிகளிலும் போராடலாம் என்று அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியும், அதனை தடுப்பது சர்வாதிகார ஆட்சிபோல் உள்ளது. இதை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மத்திய அரசு அலுவலகமான தாபல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றோம்" என்று கூறினார்.
#WATCH | A group of Tamil Nadu farmers in Trichy lend support to 'Delhi Chalo' farmers' protest
— ANI (@ANI) February 13, 2024
Farmer leader P Ayyakannu says, "As per the Constitution, we can move freely within the country for our rights but the police are not allowing farmers to protest in Delhi...If PM Modi… pic.twitter.com/AVUuYnoDYy
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.