க.சண்முகவடிவேல்
திருச்சியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்க பெண் தலைவரை விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆதரவாளர்கள் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனிடையே திருச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மையங்களில் யூரியா, பொட்டாசியம் மற்றும் உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்காததாலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து, இன்றைய தினம் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் உரசாக்குகளை கையில் ஏந்தியபடியும், அழுகிய வாழை மரங்களை கையில் வைத்துக் கொண்டும் தமிழக அரசை மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மேலும் நெல்லுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய், வாழைக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், கரும்பு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்க வேண்டும், 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற உணவுத்துறை அமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் இதனை மாற்றி 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியதால் தமிழக விவசாயிகள் சங்க மகளிர் அணி தலைவி கௌசல்யா என்பவர் ஆட்சேபனம் தெரிவித்தார். இதனால் அந்த பெண்ணை அய்யாகண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும் அடிக்கவும் முயன்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு கௌசல்யாவை கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றினர்.
மேலும் அய்யாக்கண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் கௌசல்யாவை தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதற்கு பிற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்ட நிலையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் சலசலப்புடன் காணப்பட்டது. இதனிடையே தமிழக விவசாயிகள் சங்க மகளிர் அணி தலைவி கௌசல்யா, அய்யாக்கண்ணு மீது புகார் கொடுக்க முடிவு செய்துள்ளதையடுத்து கௌசல்யாவிடம் நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil