திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயில் உச்சியில் உள்ள கார்த்திகை தீப எண்ணெய்க் கொப்பரை டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
விவசாய விலைப் பொருட்ளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதிய வழங்க வேண்டும், மிக முக்கியமாக உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடகா அரசு மாதந்தோறும் திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும், மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரதமர் மோடி விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியான இரண்டு மடங்கு லாபகரமான விலை ஏன் கொடுக்கவில்லை என வலியுறுத்தியும் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப எண்ணெய்க்கொப்பரை டவரில் ஏறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக அய்யாக்கண்ணு தெரிவிக்கையில், ’2014, 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு மோடி நிறைவேற்றவில்லை.
விவசாயிகளை டெல்லி சென்று போராட்டம் நடத்த விடவில்லை, ரயில் பயணம் செய்ய கூடாது என்பதற்காக உறுதியான ரயில்வே பயணசீட்டை ரத்து செய்கின்றனர்.
2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பிரதமர் மோடி வாரணாசி வந்து போட்டியிடலாம், 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ராகுல்காந்தி கேரளாவில் வந்து போட்டியிடலாம், ஆனால், தமிழக விவசாயிகள் வாரணாசி சென்று போட்டியிட்டால் விளம்பரதிற்காக என்று உச்ச நீதிமன்றம் கூறுவது எந்த வகையில் நியாயம்? விவசாயிகளுக்கு உரிய நியாயம் வேண்டும்.
மேலும், ஒரு கிலோ நெல் கோதுமை 18-க்கு பணி செய்ததற்கு 54 ரூபாய் தருவேன் எனக் கூறி 22 ரூபாய் தருவது நியாயமா? ஒரு டன் கரும்பு ரூபாய் 2,700 விற்றதிற்கு 8,100 தருவதாக கூறிவிட்டு 3,150 தருகிறார்கள், 500 கார்ப்பரேட் கம்பெனி வாங்கிய கடன் ரூ.14 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால், 95 கோடி விவசாயிகள் வாங்கிய ஒரு லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“