/indian-express-tamil/media/media_files/WfYCTGs4IWhpAZq39Iz3.jpeg)
Trichy
திருச்சி மாவட்டம், சோம்பரசம்பேட்டையில் FL2 வகை மதுபான கடை திறப்பதற்கு முயன்றபோது விவசாயிகளால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தி அந்த மதுபான கடை மூடப்பட்டது.
தற்போது அந்தக் கடையை மீண்டும் திறப்பதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இதனைக் கண்டித்து அந்த மதுபான கடை மூடப்பட வேண்டும், தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.பா சின்னதுரை தலைமையில் சமூக ஆர்வலர்கள் உமர், பீர்முகமது ஆகிய மூவரும் இன்று காலை முதல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சின்னதுரை; ‘கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக முதல்வர் ஆண்டுதோறும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் 2026க்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
ஆனால், தற்போது அந்த வாக்குறுதிகளை மறந்து மது, மாது, சூது நடத்தும் வகையில் FL2 வகையான மதுபான கடைகளை திறப்பது கண்டனத்திற்குரியது.
இதனை எதிர்க்கும் வகையில் செயல்படும் என்னை திமுகவின் அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ் மற்றும் காஜாமலை விஜய் ஆகியோர் மிரட்டுகின்றனர்.
சாராயத்திற்கு அக்கறை காட்டி நாட்டை கொள்ளை அடிக்க திமுகவின் திட்டமிட்டு விட்டனர். எனவே, தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும், திருச்சியில் FL2 வகை மதுபான கடை திறக்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியரும் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.