திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக பணியாற்றி வருபவர் டாக்டர்.ரமேஷ்பாபு. 2002ம் ஆண்டு அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலராகவும், 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலராகவும் பணியாற்றினார்.
பின்பு அப்போதிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சிபாரிசில் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தற்பொழுது வரை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சர்மிளா குடும்ப தலைவியாக மட்டும் இருந்து வருகிறார். டாக்டர் ரமேஷ்பாபு மற்றும் சர்மிளா இருவர் பெயரிலும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் இவர் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் 2021 வரையுள்ள காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி 2018 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக ரமேஷ் பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு மொத்தமாக ரூ.18 லட்சத்து 64 ஆயிரத்து, 428 ரூபாயாக இருந்துள்ளது.
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2018 முதல் 2021ம் ஆண்டிற்கிடைப்பட்ட காலத்தில் ரமேஷ்பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ. 2 கோடியே36 லட்சத்து, 60 ஆயிரத்து,294 ரூபாயாக இருந்துள்ளது.
ரமேஷ்பாபுவிற்கு தஞ்சாவூர் ராஜராஜ சோழன் நகரில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இருப்பதாகவும், திருச்சி தேவதானம் கிரிரோடு பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலம் இருப்பதாகவும், தஞ்சை முனிசிபல் 4-வது வார்டில் 5000 சதுரடி காலி மனையும், 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரியும், டாடா ஏஸ், மாருதி ஈகோ வாகனமும் சொந்த உபயோகத்திற்கு போலோ கார் 1, சபாரி x கார் 1, டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் 1, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள MG Cluster Car என கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பை குடும்ப டிரஸ்ட் Charu Radha Naveen Trust க்கு மடைமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர நீலகிரியில் தேயிலை தோட்டங்கள் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. திருச்சி மாவட்ட முதன்மை அமைச்சரின் ஆதரவு இருப்பதால் இவரை எதுவும் செய்ய முடியவில்லை என்றும் கூறுகின்றனர். இதற்கிடையே ரமேஷ் பாபு பெற்ற மாத வருமானம், அவருடைய மனைவி பெயரில் வாங்கிய கடன்கள் உள்ளிட்டவற்றை தவிர அவரின் சொத்து மதிப்பு 92.69 சதவீதம் உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் அவரது மனைவி சர்மிளா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரமேஷ் பாபுக்கு ஏற்கனவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குக்கா விற்பனையாளர்களிடம் இருந்து மாதம் ஓர் பெரிய தொகை வருவதாகவும் , பெரிய பெரிய ஹோட்டல்களில் இருந்தும் ( உணவு பரிசோதனை செய்ய சொல்ல மாட்டார்) மாமுல் வருகிறது எனவும் கூறப்படுகிறது. திருச்சியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிந்து இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்