நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் கடந்த 16-ம் தேதி சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து திருச்சியில் தில்லை நகர், சாஸ்திரி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கெட்டுப் போன 200 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.
இதில் 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் 6 கடைகளுக்கு தலா ரூ.3,000 வீதம் 18,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஜூஸ்போட வைத்திருந்த அழுகிய பழங்கள் கண்டறியப்பட்டதால் அந்தக் கடைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்த 50 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.
இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், "சவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் கடைகள் அன்றைய தினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது.
சோதனையின்போது, அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தங்களது பகுதியில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் தெரிவிக்கலாம்" என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பொன்ராஜ், செல்வராஜ், வசந்தன், இப்ராஹிம், ரெங்கநாதன், ஜஸ்டின், வடிவேல், அன்புச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வானது திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும், பழக்கடைகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
திருச்சி தில்லைநகரில் மட்டும் நடத்திய ஆய்வில் சுமார் 200 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாநகரின் முக்கிய உணவகங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் ரெய்டு நடத்தினால் டன் கணக்கில் கெட்டுப் போன, பதப்படுத்தப்படாத கோழி இறைச்சிகளை கைப்பற்றலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.