திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ( Smart City Mission) குடிநீர் விநியோக குழாய் மற்றும் பாதாளச் சாக்கடை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருச்சியின் முக்கிய வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடிய சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்ன கடை வீதி, சூப்பர் பஜார் ஆகிய பகுதிகளானது மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகும். இதில் சில்லறை வியாபாரம் மற்றும் வணிகங்கள் நிறுவனங்கள் அதிக நிறைந்த பகுதிகள் அடங்கும்.
இப்பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடை புனரமைக்க வேண்டியுள்ளதால், மாநகராட்சி பொறியாளர்கள், மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு, சிங்காரத்தோப்பு வணிக சங்கத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் 19வது மாமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் முன்னிலையில் (04.03.2023) அன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் இது தொடர்பாகக் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடை குழாய் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், பணியின் அவசர அவசியம் கருதி, வரும் (06.03.2023), (07.03.2023) மற்றும் (08.03.2023) ஆகிய மூன்று தினங்களில் சிங்காரத் தோப்பு தெருவில் சூப்பர் பஜார் முதல் பெரியகடை வீதி சந்திப்பு வரை உள்ள அனைத்து கடைகள், சில்லறை மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றைத் திறக்காமல் இருப்பதற்கு 04.03.2023 அன்று நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மேற்கண்ட மூன்று தினங்கள் சாலையை அடைத்துப் புனரமைக்கும் பணிகள் நடைபெறும் எனவும், பணிகள் முடிந்தவுடன் 09.03.2023 முதல் சாலை திறக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என இதன் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
மேலும், இதனால் ஏற்படும் சிரமங்களுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
திருச்சி மாநகரின் முக்கிய வணிக நிறுவனங்கள் இருக்கும் மேற்கண்ட இந்த சாலைகளுக்கு மூன்று நாள் அடைப்பு ஏற்படுத்தும் இந்த அதிரடித் திட்டத்தால் பொதுமக்களுக்கு சிரமங்கள் பெருமளவு ஏற்படும் என்பதால் மாற்று வழியை யோசிக்கலாமே என்ற கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்