க. சண்முகவடிவேல்
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது பாதுகாவலர் மீது செல்போன் திருடியதாக பொய் வழக்கு போடப்பட்டதாக கூறி அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, சிந்தாமணி பகுதியில் அதிமுக தெற்கு புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் மற்றும் புறநகர் மாவட்டம் செயலாளர் பரஞ்ஜோதி, மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான ப.குமார் பேசுகையில், “கடந்த 11ம் தேதி முன்னாள் முதல்வர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரைக்கு வருகிறார். விமானத்தில் இருந்து விமான நிலைய பேருந்து மூலம் வெளியே வரும்போது தன்னைத்தானே மிகப்பெரிய 420 என்று அழைத்துக் கொள்ளக்கூடிய அமுமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் சின்ன 420 ராஜேஷ் என்பவர் அந்த விமானத்தில் பயணம் செய்தபோது, எடப்பாடியாரை பார்த்து அசிங்கமாக பேசி கலவரத்தை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார்.

அப்போது ராஜேஷ் என்பவரை பார்த்து எடப்பாடியும், எடப்பாடியின் உதவியாளரும் முணுமுணுத்ததற்கே ராஜேஷ் கொடுத்த பொய்ப் புகாரில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் முதல்வர் எடப்பாடி மீது ஐந்து பிரிவுகளில் 10 வருடம் தண்டனை கிடைக்கும் அளவிற்கு பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய், வாய் இருந்தும் ஊமையாய் இருக்கும் இந்த காவல்துறையை என்ன சொல்வது. ஒரு முணுமுணுத்ததற்கே 10 வருட தண்டனை கொடுக்கும் அளவிற்கான வழக்குகளை பதிவிட்ட காவல்துறையை பார்த்து கேட்கிறேன், இங்கே வாரந்தோறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய அமைச்சர் கே என் நேரு தொண்டர்களை பார்த்து ஏக வசனத்தில் பேசுவதும், தலையில் அடிப்பதும் போன்ற செயல்களை செய்து வரும் அமைச்சர் நேரு மீது என்னென்ன வழக்குகள் பதிவு செய்தீர்கள்?

அமைச்சரின் பொறுப்பு என்ன என்று தெரியாத ஒரு அமைச்சர் திருச்சியில் இருக்கிறார். அவர் பெயர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவர் தனது கட்சி அலுவலகத்தில் அரசு அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தியது எந்த விதத்தில் நியாயம். இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க-வைச் சார்ந்தவர். அரசு பொது நிதியிலிருந்து ஒரு பயணிகள் நிழற்குடையை அமைத்திருக்கிறார். அதில் அவரது பெயரை அவரது கட்சி சார்ந்த நிறத்தில் பதிவிட்டிருக்கிறார். இது சட்டத்திற்கு புறம்பானது. ஆகவே இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நான் புகார் கொடுத்திருக்கிறேன்.
இங்குள்ள மாவட்ட ஆட்சியர் சைக்கிள் ஓட்டுவதை பார்த்திருக்கிறேன், மாட்டு வண்டி ஓட்டுவதை பார்த்திருக்கிறேன், கிரிக்கெட் விளையாடுகிறார் இதையெல்லாம் பார்க்கும் போது, அவர் மக்கள் பணியாற்றுவது இல்லையோ என்று தோன்றுகிறது. மாவட்ட ஆட்சியர் மக்கள் பணியாற்ற வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் அடிபணிந்து செல்ல வேண்டாம். திமுகவினர் செய்யும் தவறுகளுக்கு துணை போக வேண்டாம்” என்று அவர் காரசாரமாக பேசினார்.
காவல்துறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும் இந்த வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்த போராட்டம் ஒரு அடையாள போராட்டம் தான் வழக்கை திரும்ப பெரும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அதிமுகவினர் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil