திருச்சி கல்பாளையம் பகுதியில் வசித்து வரும் கலைவாணி என்பவர் ஸ்ரீரங்கத்தில் வி.ஏ.ஒவாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் எம்.ஏ.ஜெ டிரேடர்ஸ் (MAJ traders) என்னும் கடையில் புளி வாங்கிச் சென்றதாக தெரிகிறது. புளி சரியில்லை எனக்கூறி வியாபாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் வி.ஏ.ஒ தான் வாங்கிய பொருட்களை வியாபாரியின் கடை மீது வீசி எறிந்திருக்கிறார்.
இதில் ஆத்திரம் அடைந்த கடையில் வேலை பார்த்த பெண்கள் வி.ஏ.ஒ-விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளி தாக்கியதாக தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து சென்ற பெண் வி.ஏ.ஒ கலைவாணி கல்பாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட உறவினர்களை வரவைத்து கடை வியாபாரி மற்றும் பெண் ஊழியரை தாக்கி கடையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இது சம்பந்தமாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் சாதிக்பாஷா புகார் அளித்துள்ளார். அதேபோல், வி.ஏ.ஒ கலைவாணியும் புகார் அளித்துள்ளார்.
வியாபார ஸ்தலத்தை சூறையாடிய வி.ஏ.ஒ மற்றும் அவரது உறவினர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளை அச்சுறுத்தும் இது போன்ற அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், வி.ஏ.ஒ பதவியை தவறாக பயன்படுத்தும் இது போன்ற அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து திருச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தக அணி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக் கூறுகையில்:- இது போன்ற வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தி கடையை சேதப்படுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வியாபாரிகளை ஒன்று திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். இதனால், காந்தி மார்க்கெட் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
மேலும், இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்றும் விசாரணை மேற்கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"