திருச்சியில் ஓடும் பேருந்திலிருந்து இருக்கை கழன்று, அதனுடன் சேர்ந்து நடத்துநரும் சாலையில் விழுந்து காயமடைந்தார். இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கே.கே.நகருக்கு நேற்று முன்தினம் அரசு நகரப் பேருந்து புறப்பட்டது. அப்போது அந்தப் பேருந்தில், ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருந்த இருக்கையில் எடமலைபட்டி புதூரை சேர்ந்த நடத்துநர் முருகேசன்(54) அமர்ந்திருந்தார்.
இந்தப் பேருந்து மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வழியாகச் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, சேதமடைந்த இருக்கை முழுவதும் கழன்றதில், பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக இருக்கையுடன் சேர்ந்து, நடத்துநர் முருகேசனும் சாலையில் விழுந்தார்.
இதில் அவருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. பேருந்து பயணிகள் கூச்சலிட்டதால், ஓட்டுநர் பாஸ்கரன் பேருந்தை நிறுத்தி, காயமடைந்த நடத்துநர் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
வைரலான புகைப்படம்...
பின்னர், அந்தப் பேருந்தில் இருந்த பயணிகள், வேறு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சேதமடைந்த பேருந்து, பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“