New Update
/
கோடை கால வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அரசு மருத்துவமனை முதல்வர் நேரு தெரிவிக்கையில்; திருச்சி மாவட்டத்தில் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் அதிகமான வெப்ப அலைகள் பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உடலில் நிறைய பிரச்னைகள் ஏற்படுகிறது. வியர்வை அதிகமாக வெளியேறுவதால் உடல் அசதி, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி, இருதய பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், முக்கியமாக குழந்தைகள் இவர்களெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மேலும், கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும், இந்த வெயில் காலத்தில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தலையில் துணி கட்டிக்கொள்ள வேண்டும் அல்லது தொப்பி அணிந்து கொள்ள வேண்டும்.
உடலில் பருத்தி ஆடைகள் அணிந்து கொள்ளலாம். கருப்பு நிறத் துணிகள் வெப்ப அலைகளை அதிகமாக ஈர்த்துக் கொள்வதால் நமது உடலில் அதிகமான வெப்பம் உண்டாகும். அதனால் வெள்ளை நிறத் துணிகளை அணிவது நல்லது. முழுக்கை சட்டை அணிய வேண்டும். தலையில் தொப்பி அணிய வேண்டும். வெளியில் செல்லும் பொழுது குடை மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வது நல்லது.
இதன் மூலம் தாகத்தை தீர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், உடலிலிருந்து ஏற்படக்கூடிய உப்புச்சத்து மற்றும் மற்ற குறைபாடுகள் அனைத்தையும் குறைத்துக் கொள்ளலாம். வியர்வை அதிகமாகும் பொழுது, உடலில் உள்ள ரத்த ஓட்டத்தின் அளவு குறையும். இதனால் மயக்க நிலை ஏற்படலாம்.
இதைத் தவிர்க்க, மேலே சொன்ன விஷயங்களைக் கடைபிடித்தால் போதுமானது. காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தொடர்ந்து ஒரே இடத்தில் வேலை செய்தால் கண்டிப்பாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக ஏற்படும். அதற்குப் பதிலாக, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நிழலில் ஓய்வெடுத்து விட்டு வேலை செய்வது வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும்.
தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 4, குழந்தைகளுக்கு 4, கர்ப்பிணிகளுக்கு 4 என 12 படுக்கைகள் மருத்துவ வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.
உடனடியாக தீவிர சிகிச்சை அளிப்பதற்கு ஒவ்வொரு படுக்கையிலும், அனைத்து மருந்துகளும் உடனே செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான மருந்துகள், குளிர்சாதனப் பெட்டி, ஐஸ் கட்டிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது." இவ்வாறு டாக்டர் நேரு தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.