திருச்சி மாநகர பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணி பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சாம்சன், லால்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
சாம்சன், சிறுமிகள் தங்கி இருக்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போல கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு புகார் வந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணைக்கு பிறகு போலீசார், தலைமையாசிரியர் சகாய ராணி, மகன் மருத்துவர் சாம்சன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். அங்கு நேரமானதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முடியாமல் போனது.
மகிளா நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்த போலீசார் முற்பட்டனர், வீட்டில் ஆஜர்படுத்தப்பட முடியாததால் கோர்ட் வளாகத்தில் போலீஸ் வாகனத்தில் வெகுநேரம் காத்திருந்தனர்.
அப்போது கைதானவர்களை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் முயற்சி செய்தனர்.
பிறகு மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் வளாகத்திலிருந்து இருவரையும் எங்கு அழைத்து செல்கிறோம் என்று சொல்லாமல் போலீஸ் வாகனத்தை தபால் நிலையம் சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால் பண்ணை, காவிரி ஆறு, திருவானைக்காவல் செக் போஸ்ட், மாம்பழச்சாலை, காவிரி ஆறு பாலம் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக போலீசார், வாகனத்தை ஓட்டினர்.
காரில் உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பேரும் தலையில் துணியை மூடிக்கொண்டு முக்காடு போட்டு குனிந்து இருந்தனர்.
இருப்பினும் பத்திரிக்கையாளர்கள் பத்துக்கு மேற்பட்டவர்கள் விடாமல் இரண்டு சக்கர வாகனத்தில் வாகனத்தை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். போலீஸ் வாகனத்தின் பின்புறம் பத்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்தபோது, சாலையில் சென்றவர்கள் யாரை இப்படி விரட்டி படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என கேட்கும் நிலை ஏற்பட்டது.
காவல்துறை ஏன் போக்சாவில் கைதானவர்களை இப்படி பாதுகாக்க வேண்டும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து விட்டு அவர்களை வாகனத்தில் வைத்து ஊரையே சுற்றி, சுற்றி வந்தது பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் போக்சோ குற்றவாளிகளுக்கு இப்படி அக்கறை காட்டும் போலீசார்க்கு மறைமுக அதிகாரத்தை கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.