திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம், ரயில் நகர் பகுதியில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 4 பெண்கள் வீடு இடிந்து பலியான சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் ரயில் நகர் காந்தி குறுக்குத்தெருவை சேர்ந்த திமுக பிரமுகரும், ஆட்டோ ஓட்டுநருமான மாரிமுத்து.
இவர் தனது தாய் சாந்தி (70)மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (11), ஹரிணி (9)என ஐந்து பேருடன் தனது வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் மாரிமுத்துவின் தங்கை கணவர் சென்னையில் நேற்று இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று சென்னைக்கு சென்ற நிலையில் வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேர் தங்களின் அன்றாட பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் இரவு உறக்கத்திற்கு சென்றனர்.
இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவர்களது வீட்டின் உட்புற சுண்ணாம்பு காரையிலான மேற்கூரை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அக்கம் பக்கத்தினரோ ஏதோ புத்தாண்டு கொண்டாட்ட வெடி சத்தம் என நினைத்து விட்டு கடந்து சென்றனர்.
இந்நிலையில் அருகில் இருந்த ஒருவர் இன்று காலை மாடியில் துணி காய வைக்க சென்றபோது வீட்டின் உட்புற ஹால் மட்டும் இடிந்து விழுந்து இருப்பது தெரியவந்தது.
ஐயோ அம்மா என்று அலறியபடி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும், தீயணைப்புத் துறைக்கும் சொல்லவும் உடனடியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, குழந்தைகள் பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், காலையில் தான் மீட்பு பணிகள் நடந்தன. சுண்ணாம்பு காறைகள் நான்கு பேரின் உடல்கள் மீதும் விழந்து சிதறியதால் ஈடுபாடுகளில் சிக்கி நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவாணந்தம், எஸ் ஐ கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து வீட்டின் உரிமையாளர் மாரிமுத்துவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையிலிருந்து அவர் திருச்சி விரைந்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புத்தாண்டு பிறந்து உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்வாதாரம் இன்றி பரிதவிக்கும் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துக்கு அரசு நிவாரணம் வழங்கினால் மட்டுமே அவரின் அடுத்த கட்ட நகர்வு என்பதில் ஐயமில்லை.
க.சண்முகவடிவேல்