/indian-express-tamil/media/media_files/2025/05/05/RzUt0QO0LWXV7c3h1wEL.jpg)
தமிழகத்தில் நேற்று கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், அதை தணிக்கும் விதமாக நேற்று மாலை பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து திருச்சியை குளிர்வித்தது. திருச்சியில் கடந்த ஒரு மாதமாக வெப்பம் அதிகரித்து வந்தது.
பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து, வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல்களில், வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே கடந்த ஒரு மாதமாக நீர் மோர் பந்தல்கள் அமைத்து, பொதுமக்களுக்கு எலுமிச்சை பழச்சாறு, ரோஸ் மில்க், மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி பழம் போன்றவற்றை வழங்கி வந்தன.
இதற்கிடையில், நேற்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. வரும் மே 28-ம் தேதி வரை நீடிக்கும் கத்திரி வெயில் காலத்தில், திருச்சி மாநகரில் மேலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 6:00 மணி முதல் சூறைக்காற்றுடன் துவங்கிய ஆலங்கட்டி மழை திருச்சி மாநகரை குளிர்வித்தது.
திருச்சி ஜங்ஷன் பொன்மலை திருவரம்பூர் ஸ்ரீரங்கம் என பல்வேறு பகுதிகளிலும் கடும் வெப்பத்தால் வாட்டி வதங்கிய பொதுமக்களும் திடீர் ஆலங்கட்டி மழையால் மகிழ்ச்சி பொங்க ஆட்டம் போட்டனர். இந்த மகிழ்ச்சி நீடித்த நிலையில், அதற்கு வேட்டு வைக்கும் விதமாக திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது சாய்ந்ததால் மின்சாரம் இன்றி மாநகரமே இருளில் மூழ்கியது. திருச்சியில் பலத்த இடி மின்னலுடன் காற்றுடன் கூடிய பெய்த மழையினால் திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே மின் நிலையத்தில் இடி விழுந்ததால் ரயில் சேவையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து மதுரை சென்ற வந்தே பாரத் ரயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருச்சி பாலக்கரை ரயில் நிலையத்தில் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பலருக்கு அப்பகுதியினர் உதவி செய்து ரயிலில் இருந்து தத்தம் இருப்பிடங்களுக்கு தனியார் வாகனங்கள் மூலம் சென்றனர்.
பின்னர், டீசல் இன்ஜினை வைத்து வந்தே பாரத் ரயில் திருச்சி ஜங்ஷன் நிலையத்திற்கு இழுத்து வரப்பட்டது. பின்னர் ரயில் பயணிக்கும் தடத்திற்கு மின்விநியாகும் வழங்கப்பட்டதை அடுத்து ரயில் சேவை சீரானது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.