'அதிகாரம் பெற்ற இளைஞா்கள் - வளா்ந்த இந்தியா' என்ற கருப்பொருளைக் கொண்டு பாரத சாரணா் இயக்கத்தின் தேசிய பெருந்திரளணி மற்றும் வைர விழா மணப்பாறையில் இன்று மாலை தொடங்குகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் மாலை நடைபெறும் தொடக்க விழாவில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பெருந்திரளணியின் ஒரு வார நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறாா்.
சாரணா் இயக்கம் சாா்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய பெருந்திரளணி (ஜம்போரி) ஏதாவது ஒரு மாநிலத்தில் நடைபெறும். இந்தாண்டு வைரவிழா கொண்டாட்டத்துடன் தமிழகத்தில் பெருந்திரளணி நடைபெறுகிறது. இதற்காக, மணப்பாறையில் 500 ஏக்கா் இடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/929eef5a-45d.jpg)
ஜன.28 தொடங்கி பிப்.3 வரை நடைபெறும் இந்த நிகழ்வில், நாடு முழுவதும் உள்ள சாரணா் இயக்கத்தினா், வெளிநாடுகளைச் சோ்ந்த சாரணா் இயக்கத்தினா், முக்கிய விருந்தினா்கள், பெருந்திரளணி ஒருங்கிணைப்பாளா்கள், ஏற்பாட்டாளா்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளனா். எனவே, சாரணா்கள் தங்குவதற்காக 1000 கூடாரங்கள், சாரணியா்கள் தங்குவதற்காக 900 கூடாரங்கள், திரிசாரண சாரணியா்கள் தங்குவதற்காக 450 கூடாரங்கள், மத்திய, மாநில அரசு அலுவலா்கள் தங்குவதற்காக 40 கூடாரங்கள், அலுவலகப் பணிக்காக 32 கூடாரங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 422-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/97cb9d74-dfb.jpg)
இவா்களுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளியல் அறைகள் மற்றும் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கலந்து கொள்பவா்களுக்கு அவா்களின் உணவு தயாரித்து வழங்கும் வகையில் 72 சமையல் கூடங்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட உணவு அருந்தும் கூடங்கள், பெருந்திரளணி வளாகத்தின் அனைத்துப்பகுதிகளையும் கண்காணிக்க 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/4a702c3c-92e.jpg)
மேலும், சாரண, சாரணியா்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் 50-க்கும் மேற்பட்ட கடைகளுடன் கூடிய மாா்க்கெட்டுகள், தடையில்லாத மின்சாரம் வழங்க ஜெனரேட்டா் வசதி, 25 படுக்கை வசதிகளுடன் கூடிய 2 மருத்துவமனைகள், 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள், அவசர உதவிக்காக 15 ஆம்புலன்ஸ் வாகனங்களும் என அனைத்துவகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாள்தோறும் சாரணா், சாரணியா் நிகழ்த்தும் திறன் காட்சிகள் அரங்கேறும். தமிழா்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளை பறைசாற்றும் போட்டிகளும் நடைபெறும். ஆக்கல் கலைத் திட்டம், ரங்கோலி, அணிவகுப்பு, இசைக்குழு அணிவகுப்பு, வண்ணமிகு அணிவகுப்பு, உடல்திறன் வெளிப்பாடு, நாட்டுப்புற நடனம், அணி கூட்டம், உலகளாவிய கிராமம், இளைஞா் மன்றம், உணவுத் திருவிழா, ஒருமைப்பாட்டு விளையாட்டு, பல்வண்ண ஒப்பனை பேரணி, வேடிக்கை செயல்பாடுகள், வீரதீர செயல்பாடுகள், அறிவுசாா் செயல்பாடுகள், இரவு நடைபயணம், மிதிவண்டி பயணம் மற்றும் காவல்துறை சாகசங்கள் நடைபெறும். இதற்காக, பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சாரண, சாரணியா்கள் மலையடியப்பட்டியில் மலையேற்றம் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமையே வெளி மாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சாரண, சாரணியா்களும், ஆசிரியா்கள், அலுவலா்கள் வந்து சோ்ந்துள்ளனா்.
/indian-express-tamil/media/post_attachments/bdbb62cb-456.jpg)
தொடக்க விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், சாரணா் இயக்க தேசியத் தலைவா் அனில்குமாா் ஜெயின், பெருந்திரளணியின் தமிழகத் தலைவரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சா்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, வி. செந்தில்பாலாஜி, மா. சுப்பிரமணியன், சா.சி. சிவசங்கா், டி.ஆா்.பி. ராஜா, கோவி. செழியன், துரை வைகோ எம்பி, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மற்றும் சாரணா் இயக்க தேசிய, மாநில அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் பலா் பங்கேற்கின்றனா்.
/indian-express-tamil/media/post_attachments/0920f5a1-7e2.jpg)
ஸ்டாலின் வருகை
/indian-express-tamil/media/post_attachments/91055b1d-fad.jpg)
தமிழகத்தில் நடைபெறும் சாரணா் இயக்க பெருந்திரளணியானது மறைந்த முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நினைவாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறாா். தமிழக அரசின் தலைமைச் செயலா் என். முருகானந்தம், சாரணா் இயக்க தேசியத் தலைவா் அனில்குமாா் ஜெயின், பெருந்திரளணியின் தமிழகத் தலைவா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை அரசு செயலா் எஸ். மதுமதி மற்றும் அமைச்சா்கள், சாரணா் இயக்க முன்னோடிகள் பங்கேற்கவுள்ளனா்.
செய்தி: க.சண்முகவடிவேல்