scorecardresearch

2 மில்லியன் பயணிகள், சிறப்பான சேவை: 2022-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் தேர்வு

பல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

2 மில்லியன் பயணிகள், சிறப்பான சேவை: 2022-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் தேர்வு

திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி இன்று (மார்ச் 7) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள 291 விமான நிலையங்களில் 2 மில்லியன் பயணிகளை கையாளும் விமான நிலைய பட்டியலில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக சிறந்த விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலைய சேவை மற்றும் தரத்தினை ஆய்வு செய்யும் தன்னாச்சியான அமைப்பு நடத்திய ஆய்வில் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாவது முனையப் பணிகள் செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும். இரண்டு மில்லியன் பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் சிறந்த பரிசு பெற்ற திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகமான பயணிகள் சென்றுள்ளனர்.

தற்போது டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் சென்னைக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மும்பைக்கு புதிதாக விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலைய சுங்கத்துறை செயல்பாடுகளில் குறைகள் உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. விரைவில் குறைகள் களையப்படும். விமான ஓடுதள விரிவாக்க பணிகளுக்காக 345 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு தற்போது வரை 41 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலைய கார்கோ மூலம் நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்படுகிறது. கடந்தாண்டு 1.72 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்ட நிலையில் இவ்வாண்டு இதுவரை 1.03 மில்லியன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இவ்வாண்டு கூடுதலாக சரக்கு கையாள வாய்ப்புள்ளதாக” அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது திருச்சி விமான நிலைய அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy international airport wins aci asq awards 2022

Best of Express