Advertisment

இருளில் இருளர் குடும்பத்தினர் வாழ்க்கை; அடிப்படை வசதிக்கு கோரிக்கை

செல்போன் லைட் வெளிச்சத்தில் படிக்கும் குழந்தைகள்; ரேஷன் கார்டு, ஆதார் இல்லாமல் தவிக்கும் இருளர் மக்கள்; பட்டாவுடன் கூடிய வீடு வழங்க கோரிக்கை

author-image
WebDesk
New Update
Trichy Irula community

திருச்சி மாவட்டம், காணக்கியநல்லூர் அருகே உள்ள பெருவளப்பூர் ஊராட்சியில் மாரியாகுளம் என்ற பகுதியில் இருளர் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கரிமூட்டம் போடும் தொழிலை செய்து வருகின்றனர். கடந்த 20 வருடத்திற்கும் மேலாக பனை ஓலை குடிசையில் வசித்து வரும் இவர்கள் குடிநீர், மின்சாரம், உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

Advertisment

பெருவளப்பூர் - நம்புக்குறிச்சிக்கு இடையே செல்லும் சாலையோரத்தில் இருளில் வாழ்ந்து வரும் இருளர் மக்களின் இத்தகையை நிலைமை பார்ப்பவர்களை கதிகலங்க செய்கிறது. தற்போது பெய்த கனமழையின் காரணமாக அவர்கள் குடியிருக்கும் பகுதியில் முற்றிலும் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் செல்போன் லைட் மற்றும் சார்ஜர் லைட் வெளிச்சத்தில் குருவி கூடு போல் இருக்கும் வீட்டில் அமர்ந்து படிக்கும் அவலம் வேறு எங்கும் காண இயலாததாக இருக்கிறது.

மேலும், கை குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதையும் வருங்காலத்தையும் நினைத்து மனவேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் இருளர் மக்களுக்கு பட்டாவுடன் கூடிய ஒரு வீடு, அதற்கு மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற மனித வாழ்க்கையின் அடிப்படை தேவை மட்டுமே பல வருட கனவாக இருந்து வருகிறது. 

இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்; எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வரும் நாங்கள் கரிமூட்டம் போட்டு தொழில் செய்து வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். அதுவும் இந்த மழைக்காலங்களில் தொழில் நடக்காது. இந்த இடத்தில் சேரும் சகதியில் எங்களது பிள்ளைகள் படிப்பதற்கு ரொம்ப சிரமப்பட்டு வருகின்றனர். எங்களுக்கு மின்சார வசதி இல்லை, தண்ணீர் வசதி இல்லை. குடிநீர் பிடிக்க வேண்டும் என்றால் 2 கிலோ மீட்டர் நடந்தே செல்ல வேண்டும்.

Advertisment
Advertisement

எங்களது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் விளக்கு வைத்தும் டார்ச் லைட் அடித்தும் படித்து வருகின்றனர். நாங்களும் அரசாங்கத்திடம் எவ்வளவோ கோரிக்கை வைத்து கேட்டு பார்த்தோம். எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பட்டாவுடன் இடம் கொடுத்தாலே போதும் என்று இருக்கின்றோம் எங்களது பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். 

எங்களது கோரிக்கையை ஏற்று எந்த அரசாங்க அதிகாரி வந்தும் பார்ப்பதுமில்லை. எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதும் இல்லை. தங்களது கொட்டகையில் மழைநீர் சொட்டு சொட்டாக வடியும். படிக்கிற பிள்ளைகளின் நோட்டுப் புத்தகத்தில் கூட தண்ணீர் சொட்டும் அவல நிலை இருக்கிறது. மழைக்காலங்களில் நாங்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றோம். பிள்ளைகளும் படிக்க முடிவதில்லை. வெளியில் வர இயலவில்லை. பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவும் முடியவில்லை மழை பெய்தால் தண்ணீர் நிற்கிறது.

சோறு சமைக்க முடிவதில்லை, விறகு பொறுக்க முடிவதில்லை. எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை இல்லை. இதனால் நாங்கள் ரேஷன் வாங்க முடியாமல் கடையில் அரிசி வாங்கி சோறு தின்று வருகிறோம். நாங்கள் கரிமூட்டம் போட்டு தான் பிழைப்பு நடத்தி வருகிறோம், அதுவும் இந்த நேரத்தில் தொழில் செய்ய முடிவதில்லை. கூலி வேலைகளும் கிடைப்பதில்லை. எங்களுக்கு தண்ணீர் வசதி வேண்டும், பிள்ளைகள் படிப்பதற்கு மின்சார வசதி வேண்டும். பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு இங்கு பேருந்து நிறுத்தம் வேண்டும். எவ்வளவோ கோரிக்கைகளை கொடுத்து பார்த்து விட்டோம். ஆனால் எந்த சலுகையும் எங்களுக்கு கிடைப்பதில்லை. எங்களுக்கு பட்டாவுடன் கூடிய வீடு வேண்டும் என கூறினர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment