மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி தில்லை நகரில் உள்ள தமது அலுவலகத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது;
’ஓரணியில் தமிழ்நாடு எனும் மாபெரும் திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நீட் தேர்வு விலக்கு, இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி விரும்பும் மக்களை தமிழக முழுவதும் உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம். பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் கூட இந்தி வேண்டாம். இரு மொழிக் கொள்கை போதும் என கூறியுள்ளார்.
மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுகவில் ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர். 2 கோடியாக மாற்ற முதலமைச்சர் கூறியுள்ளார்.
டாஸ்மாக் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும், இனிமேல் திறக்கப்படாது என நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை இளைஞர் கொலையில் சிபிஐ விசாரணை கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது டிவியை பார்த்து தான் துப்பாக்கிச் சூட்டை தெரிந்து கொண்டேன் என்று சொன்னார்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 6 கோடியாக இருக்கும்போது இரண்டு கோடி பேரை புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ள தமிழக வெற்றி கழகத்தால் சேர்க்க முடியும் என அவர்கள் சொல்வது நம்புவது போல் இல்லை. கூடுதல் சீட்டுகள் கேட்கும் கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கீடு செய்வது குறித்து கட்சியின் தலைமை, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும். கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாகவும் முதலமைச்சர் முடிவு செய்வார்.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. விரைவில், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். பேருந்து நிலையத்திற்கு உள்ள கடைகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதால் சிறிது தாமதம் ஆகி உள்ளது. வருடாந்திர பராமரிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டு நிதி ஆலோசனைக் குழுவின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்படும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/02/whatsapp-image-2025-2025-07-02-12-12-29.jpeg)
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்காலத்தில் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவர முடியாத நிலையில் திமுக ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளுக்குள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் 10 ஆண்டுகால ஆட்சியில் திருச்சிக்கு எதையும் செய்ய முடியாத அதிமுக, திமுக கொண்டு வந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
தேர்தல் வாக்குறுதிபடி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால் நீட் தேர்வில் இருந்து விளக்கு பெற்றிருப்போம். தமிழக அரசுக்கு சாதகமான மத்திய ஆட்சி மலரும்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று விடுவோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நிலவப்போகிறது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்த நிலையில், எடப்பாடி தனி பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று முரண்பாடாக தெரிவித்துள்ளார். எடப்பாடியின் பேச்சில் உறுதி இல்லை எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக, தனது மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உயகொண்டான் திருமலை கொடாப்பு 25வ து வார்டு பகுதியை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு உதவியாக 13 பெண்களுக்கு இலவச தையல் மெஷின்களை அமைச்சர் கே. என். நேரு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்