திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் மோகன். கடந்த 2002 ஆம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 செண்டு நிலத்தை கிரயம் பெற்றுள்ளார்.
மோகன் தனது தந்தையின் பெயரில் வாங்கி இருந்த நிலத்திற்கு உண்டான பட்டாவில் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று தவறுதலாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொடுக்குமாறு மோகன் கடந்த 05.03.2024 ஆம் தேதி லால்குடி வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்திருந்துள்ளார். அதன் பெயரில் இவருடைய மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை பரிந்துரை செய்து லால்குடி துணை வட்டாட்சியருக்கு அனுப்பி உள்ளார்.
தான் விண்ணப்பித்து ஆறு மாதங்கள் ஆகியும் தனது வேலை முடியாத காரணத்தால் மோகன் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கடந்த ஜூலை 2024 மாதம் முதல் தொடர்ந்து சந்தித்து தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். இறுதியாக மோகன் கடந்த 26.09./2024 ஆம் தேதி லால்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்று துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை சந்தித்து தனது நிலத்திற்கான பட்டா பெயர் திருத்தம் செய்து கொடுக்குமாறு மீண்டும் வற்புறுத்திக் கேட்டுள்ளார்.
அதற்கு துணை வட்டாட்சியர் ரவிக்குமார் ரூ.50,000 கொடுத்தால் உங்களது மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதாக சொல்லியுள்ளார். பேரம் பேசி இறுதியாக ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மோகனின் மனுவை பரிந்துரை செய்ய முடியும் என்று துணை வட்டாட்சியர் ரவிக்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் டி.எஸ்.பி மணிகண்டன் என்பவரிடம் சென்று அரசு அதிகாரி லஞ்சம் கேட்பதாக கொடுத்த புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் இன்று 03.10.2024 நண்பகல் சுமார் 12 மணி அளவில் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், மோகனிடமிருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் பணத்தை துணை வட்டாட்சியர் ரவிக்குமார் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையின் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கையும் களவுமாக லஞ்சப் பணத்துடன் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியில் துணை வட்டாட்சியர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.