திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது. இதில் 40 வேட்பாளர்களின் 48 மனு மீது விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோ, அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கருப்பையா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் செந்தில்நாதன் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும் நாம் தமிழர் உள்ளிட்ட மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்களும் ஏற்கப்பட்டது.
இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவரும், வழக்கறிஞருமான பொன்.முருகேசன், அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா மீது கறம்பக்குடியில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை படிவத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளாரா? என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமாரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது என அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா சமர்ப்பித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பதிலளித்து கருப்பையா மனுவை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் இதுகுறித்து பொன்.முருகேசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட வேட்பாளர் களத்தில் உள்ளார். பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படக் கூடியவர், பட்டியலினத்தை சேர்ந்த வெள்ளாள கொள்ளை (புதுக்கோட்டை மாவட்டம்) ரவி கொலை வழக்கில் இவர் மீது எப்.ஐ.ஆர்.போடப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினரும், ஏன் நானுமே கோரிக்கை வைத்திருக்கின்றேன்.
அதேபோல், அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களை சாதிப்பெயரை சொல்லியே அழைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார். அதிகாரத்தில் இல்லாதபோதே ஆளுமை பலத்துடன் செயல்படக்கூடியவர் அதிகாரத்திற்கு வந்தால் இவர் மீதான வழக்கும் நீர்த்துப்போக வாய்ப்பு இருக்கின்றது. மேலும், கருப்பையா மற்றும் அவரது சகோதரர் மணல் கரிகாலன் ஆகியோர், எங்களால் பயனடையாத அரசியல் கட்சியினர் தமிழகத்தில் எவரும் கிடையாது, குறிப்பாக திருச்சியில் எவருமே கிடையாது என பேசி வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது. ஆகவே தான் இவரது மனுக்கு நான் ஆட்சேபனை தெரிவித்தேன் என்றார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“