திருச்சி: திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மணி மண்டபங்கள்!
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த மூணு மணிமண்டபங்களில்பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் ரூ.99 லட்சம் செலவில் முழு உருவச் சிலையுடன் 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் உள்ளிட்ட 3 மணிமண்டபங்கள் பொதுப்பணித்துறயின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு மூலம் கட்டப்பட்டு திறப்பு விழா காணாமல் இருப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த விபரம் வருமாறு: திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கோ. அபிஷேகபுரம்கோட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் மற்றும் நூலகம், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் உள்ளிட்ட 3 மணிமண்டபங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு மூலம் கட்டப்பட்டன.
இந்த 3 மணி மண்டப பணிகள் நிறைவு பெற்றும் திறப்பு விழா காணாதது பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த மூணு மணிமண்டபங்களில்பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் ரூ.99 லட்சம் செலவில் முழு உருவச் சிலையுடன் 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து 1,184 சதுர அடி பரப்பளவில இந்த மண்டபத்தின் தரை தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபம் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் 1,722 சதுர அடி பரப்பளவு, தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ரூ.42 லட்சம் செலவில் 1,722 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் முத்தரையர் மணிமண்டபத்திற்கு ரூ.48 லட்சமும், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபத்திற்கு ரூ.34 லட்சமும், தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்திற்கு ரூ.36 லட்சம் என கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்னும் நிதி ஒதுக்கப்படாததால் இந்த மூன்று மணி மண்டபங்களும் முழுமை பெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து சமூக ஆர்வலரிடம் கேட்டபோது, அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று முக்கிய தலைவர்களின் மணிமண்டபம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் கட்ட திட்டமிட்டு பணிகளும் ஜரூராக நடந்தது.
கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா காணாதது வருத்தம் அளிக்கிறது. திருச்சியில் மிகப் பிரபலமான இவர்களுடைய வாழ்க்கை வரலாறும், சாதனைகளும் இன்றைய தலைமுறைக்கு பெரிய அளவில் தெரிவதில்லை.
பல சாதனைகளை படைத்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் இந்த மணி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது என்பது பாராட்டப்படக் கூடியது என்றாலும், பணிகள் முடிந்தும் ஏதோ சில அரசியல் காரணங்களுக்காக இந்த மணிமண்டபங்கள் திறக்கப்படாத சூழ்நிலையே நிலவி வருவது வருத்தம் அளிக்கிறது.
மேலும் இந்த மணிமண்டபங்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்பதாலும் இந்த திறப்பு விழா தள்ளிப் போகின்றதோ என்கின்றனர். வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் இந்த மூன்று மணி மண்டபங்களையும் எப்போது திறப்பார்கள் என திருச்சி மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“