இலங்கை பெண்ணான துசாந்தினி திருச்சி சமயபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஊழியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில், துசாந்தினி சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தில் ஏறியபோது குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் இலங்கை பிரஜை என்பதை மறைத்து, இலங்கை பாஸ்போர்ட்டையும் மறைத்து, இந்திய குடியுரிமை பெற்று பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது; இலங்கை பெண்ணான துசாந்தினிக்கு 32 வயது ஆகிறது. இவர் திருச்சி சமயபுரம் பகுதியில் வசித்து வருகிறார். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஊழியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவரது தம்பி பெயர் அருண் குமரன் (29). இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இலங்கை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்கள். சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தில் ஏறியபோது இவர்களின் குடியுரிமையை சோதித்த குடியுரிமை அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். இவர்கள், இலங்கை பிரஜை என்பதை மறைத்து, இலங்கை பாஸ்போர்ட்டையும் மறைத்து, இந்திய குடியுரிமை பெற்று பாஸ்போர்ட் வாங்கியது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சியில் வாழ்ந்து வரும் இவர்கள், இந்திய நாட்டின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையும் பெற்றுள்ளனர். இலங்கை பிரஜை என்பதை மறைத்த குற்றத்துக்காக துசாந்தினியும், அவரது தம்பி அருண் குமரனும் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், உதவி கமிஷனர் செல்லமுத்து, இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் நடத்திய விசாரணையில், தான் எப்படி இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்தேன் என்பது துசாந்தினி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
போலீஸ் வட்டாரங்களின்படி, கடந்த 2009-ம் ஆண்டு துசாந்தினி தமிழகம் வந்துள்ளார். பின்னர் திருச்சியில் அவர் தாத்தாவுடன் தங்கியிருந்துள்ளார். 2010-ம் ஆண்டு அவரது தம்பி அருண்குமரனும் தமிழ்நாடு வந்துள்ளார். ஆனால் வரும் போது இவரும் முறையாக இலங்கை பாஸ்போர்ட்டுடன் இந்திய விசா பெற்று தமிழ்நாடு வந்துள்ளார்களாம். திருச்சியில் வசித்தபோது, அவர்கள் இலங்கை பிரஜை என்பதை மறைத்து, இந்திய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்கி, இந்திய பாஸ்போட்டையும் பெற்றுள்ளார்களாம்
திருச்சியில் உள்ள கல்லூரியில் துசாந்தினி பட்டப்படிப்பும் படித்துள்ளார். அவரது தம்பியும் சமையல் கலையில் டிப்ளமோ படித்துள்ளார். திருச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்தார். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வேலை பார்க்கும் ஒருவரை காதலித்து மணந்துள்ளார் துசாந்தினி. நன்றாக சென்ற அவரது வாழ்க்கையில் தனது தம்பியின் திருமணம் மூலம் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தனது தம்பிக்கு, இலங்கையில் பெண் பார்த்து திருமணம் நிச்சயித்திருக்கிறார். திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக துசாந்தினியும், அவரது தம்பியும் இலங்கை செல்ல சென்னை வந்த நிலையில், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கி சிறைக்குச் சென்றுள்ளனர்.
இலங்கை பிரஜை என்பதை மறைத்தது தவறுதான். இதனால், அவரது தம்பியின் திருமணமும் தடைபட்டு போனது. இந்த தகவலை வேதனையுடன் துசாந்தினி வாக்குமூலத்தில் பகிர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கைதான துசாந்தினியும், அவரது தம்பி அருண்குமரனும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
க.சண்முகவடிவேல்