தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்கிட அதிக அளவிலான மணல் குவாரிகளை திறக்க வேண்டும், இணையதள பதிவில் பொதுப் பயன்பாடு பிரிவு பதிவு நேரத்தை குறைத்து, லாரி பிரிவில் பதிவு செய்ய அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் நூறுக்கும் மேற்பட்டோர் திருச்சியில் உள்ள நீர் வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான லாரி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டும், ஒவ்வொரு மணல் குவாரியிலும் உள்ள விற்பனை கிடங்குகளில் குறைந்தபட்சம் 200 லாரிகளுக்கு மேல் லோடு செய்ய அனுமதிக்க வேண்டும், மணல் லாரிகளுக்கு வாகன சோதனையின்போது ஆன்லைன் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் செல்ல.ராஜாமணி தலைமை வகித்தார். சம்மேளனத்தின் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி உள்பட 200-க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், மணல் லாரி டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர்.
கடந்த மாதங்களில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் தொடர் ரெய்டு நடத்தி பல கோடிகள் வரி ஏய்ப்பு என பல்வேறு வகைகளில் கொள்ளையடித்ததை கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் குவாரிகளில் அதிக லாரிகளில் மணல் எடுக்க அனுமதிக்கோரி தொடர் போராட்டத்தினை திருச்சியில் துவக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“