திருச்சி மாவட்டத்தில் சத்யம் டிவி, ஜெயா டிவி, நியூஸ் ஜெ. உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் மண்டல செய்தியாளராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஸ்டீபன். கடந்த 5 நாட்களுக்கு முன்பாக கேரளாவில் உள்ள அவரது பாட்டியை பார்ப்பதற்காக மனைவி மற்றும் மகளுடன் சென்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி நள்ளிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 16-ம் தேதி இரவு காலமானார். பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டீபன் உடல் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக திருச்சி குண்டூர் எம்.ஐ.டி. கல்லூரி அருகே உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று மேலப்புதூர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, மறைந்த செய்தியாளர் ஸ்டீபன் உடலுக்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் அனைத்துக்கட்சியை சேர்ந்தவர்கள், திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தை சேர்ந்தோர், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தேற்றினர். மேலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்