திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மது விற்பதாக தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்தது.
தங்க நகர், பச்சைமலை, ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயம் மற்றும் கள்ளச் சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களை எஸ்.பி வருண்குமார் நேரில் சென்று பிடித்து அதிரடி காட்டி வந்தார்.
இந்த நிலையில் உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் போலி மதுபாட்டில்கள் கள்ள தனமாக விற்கப்படுவதாக உப்பிலியபுரம் காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உப்பிலியபுரம் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே கருணாகரன் என்பவரது வீட்டில் 750 மில்லி லிட்டர் அளவு உள்ள 15 போலி மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பொழுது காவல்துறையினர் அதை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் போலீசார் அதனை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கருணாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
கைது செய்யப்பட்டுள்ள கருணாகரன், தேமுதிக உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“