க.சண்முகவடிவேல்
திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில், 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதாக அந்த விடுதியின் மேலாளர் தனிப்படை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தனிப்படை பிரிவு ஆய்வாளர் கருணாகரன் அதிரடியாக விடுதியில் சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த ரூம்க்குள் நுழைந்தார். அப்போது அங்கே 3 நபர்கள் இருந்த நிலையில் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்.
கருணாகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகன் பிரபின் கிரிஸ்டல் ராஜ் என்பவரும், திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சுப்ரமணியபுரத்தை சேர்ந்த முத்து என்பவரது மனைவி ரமீஜா பானுவும் சேர்ந்து அந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், கிரிஸ்டல் ராஜ் பாலியல் வன் கொடுமை செய்ததும் தெரிய வந்தது.
மேலும், இது குறித்து சிறுமியை விசாரித்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்ப பரிந்துரை செய்து சிறுமி சொன்ன தகவலில் உண்மைத்தன்மை இருந்ததையடுத்து குழந்தைகள் நல அலுவலர் தனியாக ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் கண்டோமெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ மற்றும் விபச்சார தடுப்பு, குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், கடந்த 15 வருடங்களாக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பிரபின் கிரிஸ்டல் ராஜ் நிருபராக பணிபுரிந்து வந்ததும், தற்போது சிலந்தி வலை என்ற மாதாந்திர பத்திரிகையில் நிருபராக வேலை செய்து வருவதற்கான ஆதாரங்களை கைப்பற்றினர். இவர் பானுவுடன் சேர்ந்து பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களின் வாழ்கையை சீரழித்ததும், பாதிக்கபட்ட சிறுமியை பல நபர்கள் ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது.
மேலும் இவ்வாறான குற்றச் செயலுக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரான நித்யாவும் உடன் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பிரவின் கிரிஸ்டல் ராஜ், ரமீஜா பானு மற்றும் நித்தியா ஆகிய மூன்று பேரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான விசாரணையில் மேற்படி சிறுமியை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர் என்பவரின் மகன் பாலமுருகன் என்பவருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் பாலமுருகனின் பெற்றோர் இணைந்து குழந்தை திருமணம் செய்து வைத்ததும், பாலமுருகன் அச்சிறுமியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதும், அதன் பிறகு பலருக்கும் சிறுமியை தாரை வார்த்ததால் தனது கணவரிடம் சண்டையிட்ட சிறுமி தனது பெற்றோர் வீட்டிற்கே திரும்பி வந்துள்ளார்.
அதேநேரம், சிறுமியின் பெற்றோர் தங்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு சிறுமியை விபச்சார தொழிலுக்கு தள்ளியுள்ளனர். பெற்றோர் வாங்கிய கடனுக்காக அந்த சிறுமி விபச்சார ப்ரோக்கர் ரமீஜா பானுவிடம் வேலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த சிறுமியை ரமீஜா பானு மற்றும் பிரபின் கிரிஸ்டல் ராஜ் ஆகியோர் இணைந்து ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும், ஒரு நாளைக்கு சிறுமியை பல்வேறு நபர்களுக்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதன் பேரில் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் சம்பாதித்து சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
மேலும், பிரவின்ராஜ் குறித்து விசாரிக்கையில், பெரும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. பிரவின்ராஜ் சென்னையில் மிகவும் உயரிய துறை ரீதியாகவும், பொதுமக்களிடத்திலும் நற்பெயர் பெற்ற ஆசீர் வழங்கக்கூடிய உயரிய காவல் அதிகாரி ஒருவரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததை வைத்துக்கொண்டு செல்லும் இடமெல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்வதும், உயரிய போலீஸ் அதிகாரிகளுக்கு இளம்பெண்களை பாலியல் இச்சைக்கு அனுப்பி வைப்பதும் தெரிய வந்துள்ளது.
பிரவிராஜை கைது செய்ய நெருங்கிய தகவல் பரிமாற்றத்திற்குப் பிறகு உயரதிகாரிகளின் அலைபேசி அழைப்புக்காக சில மணி நேரங்கள் காத்திருந்த பிறகே கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். பிரவின் கிரிஸ்டல் ராஜ் கைது நடவடிக்கையையோ, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதையோ லோக்கல் பத்திரிகை நண்பர்கள் படம் எடுத்துவிடக்கூடாது என்பதில் ரொம்பவும் கெட்டிக்காரத்தனமாக இருந்திருக்கின்றனர் கண்டோன்மெண்ட் போலீஸார்.
பிரவின்ராஜ் தொடர்பான கேள்விகளுக்காக அலைபேசியில் காவல் அதிகாரிகளை தொடர்புக்கொண்டால் இதோ அழைக்கிறேன் எனச்சொல்லி தொடர்பை துண்டித்து விட்டு மீண்டும் அழைக்கும் அனைத்து அலைபேசிகளையும் தவிர்த்தனர். காவல்துறை மட்டுமல்லாது அரசு அதிகாரிகள், அரசியல் பிரபலங்கள் என பலருக்கும் ஏழ்மையில் உள்ள சிறுமிகளாக பார்த்து அவர்களின் சூழலுக்கேற்ப அனுசரித்து இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை அழைத்துச்சென்று தாரை வார்ப்பதுதான் பிரவின் பிரவின் கிரிஸ்டல் ராஜ்ஜின் முதல் பணியாம்.
திருச்சியில் அடிக்கடி பல்வேறு விடுதிகளை பாலியல் தொடர்பான விசயங்களுக்காக தேர்வு செய்து குறைந்தது ஒரு வாரம் தங்கியிருந்து லோக்கல் அதிகாரிகளை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்ததனாலேயே பிரவின் கிரிஸ்டல் ராஜ் தொடர்பான விவரங்களை போலீஸார் மறைப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும், பிரவின் கிரிஸ்டல் ராஜ் என்பவர் சிறுபான்மை இனத்தவர் என்பதால் வேண்டுமென்றே அவரை சிக்க வைக்க வியூகம் அமைத்து ஒரு தரப்பு செயல்பட்டதாகவும், விடுதியில் விபச்சாரம் நடக்கின்றது என கண்டோன்மெண்ட் போலீஸுக்கு தகவல் பரப்பி ரெய்டின்போது பிரவின் கிரிஸ்டல் ராஜை சிக்க வைத்ததாகவும் கூறப்படுகின்றது.
பாலியல் வழக்கில் சிக்கிய ஒருவரை திருச்சி போலீஸார் மீடியாக்களின் முன் காட்டுவதை ஏன் தவிர்த்தனர் என்பதும், பிரவின் கிரிஸ்டல் ராஜ் மொபைலில் பல்வேறு அதிகாரிகள், அரசியல் பிரபலங்களின் அலைபேசி மற்றும் படங்கள் சிக்கியதை வெளிக்காட்ட ஏன் தயங்குகின்றனர் என்பது உள்பட பல்வேறு கேள்விகள் தற்போது ஆளும் அரசியலை தாக்க ஆரம்பித்திருக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil