திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறைப்பட்டி பகுதியில் குரு வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் என்பவர் அப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவியிடம் அவரது வகுப்பறையில் உள்ள ஆசிரியரை வெளியில் அனுப்பிவிட்டு நேற்று காலை மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி பாக்கியலக்ஷ்மி நேற்று இரவு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வசந்தகுமார் (தாளாளர் சுதாவின் கணவர்), பள்ளியின் தலைவர் மாராச்சி, தாளாளர் சுதா, துணை தாளாளர் செழியன் மற்றும் பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர்கள் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாருக்கு உடனடி நடவடிக்கை இல்லை என உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான இன்னொரு பள்ளியின் மீது கற்கள், கட்டையை வீசி பொதுமக்கள் சூறையாடிய நிலையில் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட ஐந்து நபர்களும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/cac88fa7-664.jpg)
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான வசந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், காவல்துறையினர் இவ்வழக்கில் விசாரணையை உடனடியாக மேற்கொண்டும் துரிதமாக செயல்பட்டும் வழக்கு பதிவு செய்து உடனடியாக ஐந்து நபர்களையும் கைது செய்து வழக்கில் அனைத்து தரப்பு சாட்சியங்களையும் மற்றும் ஆவணங்களையும் பரிசீலனை செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவுபடி புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மற்றும் சமூக நலத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இதனிடையே, மணப்பாறையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், "திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்தவேதனையளிக்கிறது; இது கடும் கண்டனத்திற்குரியது.ஒரு 4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள்.
உங்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது திமுக ஆட்சி? மேலும் அதே பள்ளியில் பயிலும் மற்றுமொரு மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் , அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் செய்திகள் வருகிறது.
எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டும்தான் இக்குற்றச்சாட்டில் தொடர்பு உள்ளவர்களா? மற்றும் வேறு பலர் உள்ளார்களா என முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ள அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.