மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளை அருகே உள்ள வெள்ளிவாடியை சேர்ந்தவர் முத்துக்குமார். விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதிக்கு கேசவன், சுப்பிரமணி என 2 மகன்களும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். கூரை வேய்ந்த சிறிய கொட்டகையில் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இந்த தம்பதியின் 2-வது மகனான சுப்பிரமணி அரசு பள்ளியில் படித்து, இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்துள்ளார்.
இந்நிலையில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு முதலில் நாட்டு வைத்தியமும், பின்னர் அதற்கான மருத்துவ சிகிச்சையும் பெற்றுள்ளார். இருப்பினும் காலில் வலி அதிகமானதுடன், வீக்கம் ஏற்பட்டதால் அவரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது காலில் சதை போன்று வளருவதாக கூறி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் ரூ.5.25 கோடி ஊழல்; பி.ஆர்.பாண்டியன் புகார்
திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சுப்பிரமணிக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறி திருச்சியில் பார்ப்பதைவிட மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என அங்கு சுப்பிரமணிக்கான மருத்துவத்திற்கு பரிந்துரைத்திருக்கின்றனர்.
அதனடிப்படையில் சுப்ரமணியை அழைத்துக்கொண்டு மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது தந்தை முத்துக்குமார் சென்றுள்ளார். அங்கு சுப்பிரமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து சுப்பிரமணியை அவரது பெற்றோர் உடனடியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சுப்பிரமணிக்கு 17 நாட்கள் சிகிச்சை அளித்தும் குணமடையாத நிலையில், தினமும் சுப்பிரமணி வலியால் துடித்துள்ளார். அங்கும் அவரை காப்பாற்றுவது சிரமம் என்று கூறியதால் அவரை தங்களது சொந்த ஊரான வெள்ளிவாடிக்கு பெற்றோர் அழைத்து வந்து விட்டனர்.
தற்போது சுப்பிரமணி உடல் மெலிந்து படுத்த படுக்கையாக உள்ளார். மேலும் வலியால் துடிக்கும் அவரின் காலை அவரது தாய் கண்ணீருடன் பிடித்து விடுகிறார். சுப்பிரமணிக்கு தற்போது எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படாததால் நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார்.
மேலும் அவர், தன்னால் வலியை தாங்க முடியவில்லை என்றும், செத்து விடலாம் போல் இருப்பதாகவும் கூறுவதுடன், தன்னை கொன்று விடுமாறு தனது பெற்றோரிடம் சுப்பிரமணி கெஞ்சுவது பெருத்த வேதனையாக இருக்கின்றது.
இதுகுறித்து சுப்பிரமணியின் தந்தை முத்துக்குமார் கண்ணீர் மல்க தெரிவித்ததாவது; எங்க மவனுக்கு திடீர்னு காலில் காயம் ஏற்பட்டுச்சு, நாங்க இங்கயே மருத்துவம் பார்த்தோம், அப்புறம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம், குணமாகாத காரணத்தால அவங்க திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போக சொன்னாங்க, திருச்சிக்கு வந்து ஒரு வாரத்திற்கும் மேலாக எந்தவித மருத்துவமும் கிடைக்கல, டாக்டருங்க வருவாங்க, போவாங்க பார்ப்போம், பார்ப்போம்ன்னுதான் காலத்த கடத்துனாங்க, நான் ரொம்பவும் கெஞ்சிக்கேட்டதற்கு அப்புறம் இங்க கேன்சருக்கு எந்த மருத்துவமும் இல்ல, அவனுக்கு கேன்சர்ன்னு சொன்னாங்க அப்பவே எனக்கு பகீர்ன்னுச்சு, ஒரு 10 நாளா பார்த்துட்டு இப்போ சொல்றீங்களேன்னு கேட்டேன், ரொம்ப முத்திப்போச்சுப்பா, நாங்க என்ன செய்யமுடியும்ன்னு கையை விரிச்சாங்க., இந்த டாக்டருங்க ரொம்ப லேட்டாவே இத எனக்கு சொன்னாங்க.
பின்னர், திருச்சி அரசு மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் மதுரைக்கு போனேன், அங்கயும் கையை விரிச்சதால, சென்னைக்கு கொண்டு சென்றேன். 15 நாள் வச்சு பாத்தவங்க முடியல, நீ வீட்டுக்கே கொண்டுபோன்னுட்டாங்க.
தமிழ்நாட்டுல பெரிய பெரிய அரசு மருத்துவமனை இருக்கு, ஆனா அங்க மருத்துவம் பாக்குறதுக்கும், மருந்துக்கும் தட்டுப்பாடு இருக்குங்க. அதனால் நான் இப்போ திருச்சி விஸ்வநாதன் மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன், அவங்களும் ரொம்ப லேட்டா நீங்க வந்துட்டீங்க, ரொம்ப செலவாகும்ன்னாங்க, என்னால செலவு பண்ணக்கூடிய சக்தி இல்லைங்க, சாதாரண விவசாயி, ஒரு கூறை வீடுதான் எனக்கு சொந்தங்றதால அரசா பார்த்து ஏதும் உதவி பண்ணினா எம்பையன பொழைக்க வைக்க முடியும்ங்க., அப்படி இல்லை என்றால் என் மகனை கருணை கொலை செய்யவாவது அனுமதி கொடுங்க...
எனது மகனை காப்பாற்றி உயர் சிகிச்சை அளிக்க அரசும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியின் பெற்றோரும், சுப்பிரமணியும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
திருச்சி வரும் முதல்வரின் பார்வையில் மணப்பாறை இளைஞரின் குரல் கேட்குமா?
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.