Advertisment

மணப்பாறை அருகே விபத்தில் 2 பேர் மரணம்; தீயணைப்புத் துறையினர் தாமதத்தால் பொதுமக்கள் ஆவேசம்

மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் விழுந்து விபத்து; கணவன் – மனைவி மரணம்; காயமடைந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை; தாமதமாக வந்த தீயணைப்பு துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

author-image
WebDesk
New Update
Trichy car accident

மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் விழுந்து விபத்து

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன். இவரது மனைவி ராஜஸ்ரீ, இவர்களது மகள் ருதிஷா ஆகிய மூன்று பேரும் காரில் பழனி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். காரை சசிதரன் ஓட்டியுள்ளார். மணப்பாறை, அஞ்சாலி களம் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் இன்று காலை சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பாலத்தடுப்பு கட்டையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisment

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் வர தாமதமானதால் அப்பகுதி பொதுமக்களே இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தாய் - மகள் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சசிதரன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதால் அவரை உடனே மீட்க முடியவில்லை. இதையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் இருந்த அவரச கால மருத்துவ நிபுணர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சசிதரனுக்கு குளுகோஸ் போட்டு அவசர சிகிச்சையை தொடர்ந்தார். இருப்பினும் சசிதரனை மீட்க முடியாத நிலை ஏற்பட்டதால் கிரேன் உதவியுடன் காரை பள்ளத்தில் இருந்து சாலை பகுதிக்கு கொண்டு வந்து காரை உடைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதே போல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்ரீ-யும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இறந்த இருவரின் உடல்களையும் மணப்பாறை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்விற்கான மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ருதிஷா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தும் நீண்ட நேரத்திற்கு பின்னரே தீயணைப்பு துறையினர் வந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து தீயணைப்பு துறையினரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment