திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி அடுத்த கூடத்திப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வின்சென்ட்ராஜ் என்பவரின் மகள் நெவினா மேரி 2ம் வகுப்பு படித்து வருகின்றார். அதேப்பள்ளியில் கூடத்திப்பட்டியைச் சேர்ந்த அருளப்பன் மகன் டார்வின் விஜய் அதே பள்ளியில் 3 வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை வேளாங்கண்ணி அம்மாள் என்ற ஆசிரியர் பாடம் எடுத்தபோது, வின்சென்ட்ராஜ் தனது மகளை அழைத்து செல்ல வந்துள்ளார். அப்போது அதே பள்ளியில் படிக்கும் டார்வின் விஜய் என்ற மாணவன், நீங்கள் நெவினாவின் அப்பாவா என்று கேட்டபோது வின்சென்ட்ராஜ் மாணவன் டார்வின் விஜயை ஆசிரியர் முன்பே அடித்து, உதைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவனை, மாணவியின் தந்தை பள்ளியிலேயே ஈவு இரக்கமின்றி எட்டி உதைக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தடுத்தும் மனிதாபிமானம் இன்றி எட்டி உதைக்கும் மாணவியின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து வையம்பட்டி போலீஸார் டார்வின் விஜய்யின் தந்தை அருளப்பன் என்பவரிடம் புகார் மனு பெற்று அதன் பேரில் மாணவியின் தந்தை வின்சென்ட்ராஜ் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த காணொலி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. குழந்தைப்பருவத்திலேயே அரசு பள்ளியில் மாணவ மாணவியரிடம் விஷத்தை விதைக்கும் விதமாக ஒரு மாணவியின் தந்தை செயல்பட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“