திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சேர்வைக்காரன்பட்டியில் கிராமப்புற பெண்களிடம் திருநீறு கொடுத்து சுயநினைவு இழக்க செய்து பணம் பறித்த இருவரை பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியில் நுழைந்த இருவர் அங்குள்ள கிராமப்புற பெண்களிடம் வீரப்பூர் கோயிலில் அன்னதானம் நடத்துவதாகவும், தோஷங்கள் கழிப்பதாகவும் கூறி திருநீறு கொடுத்து, அவர்களை சுயநினைவு இழக்கச்செய்து ஏமாற்றி பணம் பறித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: மீண்டும் குற்றச் செயல்கள்; குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்து கோவை கமிஷனர் உத்தரவு
இதேபோல் 4 வீடுகளில் பணம் பறித்த இருவரும் அங்கிருந்த டைலர் க.நாகராஜ் என்பவரிடம் அன்னதானத்திற்கு போலியான நன்கொடை ரசீது கொடுத்து பணம் கேட்டு பெற்றுள்ளனர். பின் அவரிடம் திருநீறு அளித்துள்ளனர். திருநீர் பெற்ற நாகராஜ் சுயநினைவு இழந்து வீட்டில் இருந்த சம்பள தொகை ரூ.3500 முழுவதையும் அவர்களிடம் கொடுத்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு சுயநினைவு பெற்ற நாகராஜ் பணம் இழந்ததையறிந்து திருநீறு அளித்தவர்களை தேடியபோது, அவர்கள் இருவரும் அடுத்த வீட்டில் வசூலில் இருந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் திருநீறு அளித்து பணம் சுருட்டிய இருவரையும் பிடித்து வைத்தனர். பின் அங்கிருந்து சுமார் 2 கிமீ தொலைவிற்கு அவர்களை கைகளை கட்டி ஊர்வலமாக அழைத்து வந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இருவரும் விராலிமலை அடுத்த அத்திப்பள்ளம் பகுதியினை சேர்ந்த அப்பாரு மகன் பாண்டி (50) மற்றும் நடராஜன் மகன் நல்லு (65) என்பது தெரியவந்தது.
மேலும், இருவரும் இதேபோல் கிராம பகுதிகளுக்கு சென்று திருநீறு, மை ஆகியவற்றை அளித்து பொதுமக்களிடம் பணம் சுருட்டி வருவதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து நாகராஜ் அளித்த புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil