/indian-express-tamil/media/media_files/2025/08/14/trichy-marxist-communists-protest-demanding-relief-for-man-death-due-to-wild-boar-bite-tamil-news-2025-08-14-20-42-52.jpg)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போரட்டதால் காட்டுப்பன்றி கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவருக்கு ரூ 50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்ட உத்தமர்சீலி, கிளிக்கூடு, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை காட்டுப்பன்றிகள் தொடர்ந்து சேதம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 11-ந்தேதி கவுந்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி சகாதேவன் (45) என்பவரை காட்டுப்பன்றி கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகிறார்.
இதேபோல் அன்று மாலை உத்தமர்சீலியில் கணபதி என்பவர் வாழைத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அங்கு வந்த காட்டுபன்றி கணபதியை கடித்து குதறி கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது. இதில் அவருக்கு, தொடை, கை, இடுப்பு என பல இடங்களில் படுகாயடடைந்த ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கணபதி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில், காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்த கணபதியின் உடலை வனசரக அதிகாரிகள் பார்வையிட்டு காட்டுப்பன்றி தாக்கியதில் தான் கணபதி உயிரிழந்தார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வனசட்டப்படி வனவிலங்கு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை ரூ.10 லட்சத்தை உடனே வழங்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றுப்பகுதியையொட்டி உள்ள கல்லணை கரையோரப் பகுதிகளில் அதிகளவில் காட்டுப்பன்றிகள் சுற்றித்திரிகின்றன, இதனால் விவசாயிகளை காட்டுப்பன்றிகள் தாக்குவதையும், பயிர்களை சேதம் செய்வதையும் வனபாதுகாவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்க வேண்டும், வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கணபதி குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கணபதி உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றிச்செல்வம், மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அஹமது ஆகியோர் பேசினர். போராட்டத்தில் பகுதிக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, கோவிந்தன், கிளை செயலாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட கோட்டாச்சியர், ஶ்ரீரங்கம் வட்டாச்சியர் மற்றும் வனசரக அதிகாரி சுப்ரமணியன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் காட்டுப்பன்றி தாக்கி இறந்த கணபதியின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை ரூ.10 லட்சம் உடனடியாக வழங்குவது, காயமடைந்தவருக்கு ரூ.50,000 வழங்கப்படும், ரோந்து பணியில் உடனடியாக ஆட்களை நியமிப்பது.
வனவிலங்குகளில் நடமாட்டங்களை ட்ரோன் மூலம் கண்காணிப்பது, வனவிலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கப்படும். ஒரு வார காலத்திற்குள் அரசினுடைய ஒப்புதல் பெற்று காட்டுப்பன்றிகளை பிடித்து காட்டிற்குள் விடப்படும். இப்பகுதியில் வனவிலங்குகளால் விவசாயிகள் தாக்கப்படுவது, பயிர்கள் சேதமாவது குறித்து குழுஅமைத்து ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கணபதியின் உடலை நண்பகல் அவரது உறவினர்களும் பொதுமக்களும் பெற்று சென்றனர். இதனால் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு பெரும் பரபரப்பு நிலவியது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.