திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான பால் குளிரிட்டும் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையம் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறப்படும் பாலை குளிரூட்டப்பட்டு பின்பு அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்வது வழக்கம். இதே போல் இன்று (அக்.10) காலையில் பால் குளிரட்டும் நிலையத்தில் உள்ள நீராவி கொதிகலன் வெடித்து அமோனியம் குளோரைடு வாயு கசிந்தது.
கொதிகலன் வெடித்ததில் தொழிற்சாலை மேல் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகள் பல அடி தூரம் பறந்து சென்றது. பணி செய்பவர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் அமோனியம் குளோரைடு வாயு கசிவு ஏற்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பொது மக்களுக்கும் சுற்று வட்டார பொதுமக்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பாய்லர் வெடிப்பில் பல கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மணப்பாறை சுற்றியுள்ள 5 கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“