திருச்சி கே.கே நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூலான்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது.
அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டி கடந்த 2-6-2022 அன்று திருச்சி கனிமம் மட்டும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரது விண்ணப்பம் முசிறி வருவாய் கோட்டாட்சியர்க்கு அனுப்பப்பட்டு கள ஆய்வு செய்து இவரது விண்ணப்பம் மீண்டும் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில், விண்ணப்பம் வந்து மூன்று மாதங்கள் ஆகியும் உதவி இயக்குநர் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆல்பர்ட் நேரில் சென்று உதவி இயக்குனர் ஸ்ரீதரன் என்பவரை சந்தித்து தனக்கு கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு ஸ்ரீதரன் தான் நேரில் வந்து கள ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு கடந்த 7-2-2023 அன்று முசிறி பூலாஞ்சேரி சென்று ஆல்பர்ட்டின் இடத்தை ஆய்வு செய்துள்ளார்.
ஆய்வு செய்து முடித்தவுடன் உங்களது ஆவணங்கள் எல்லாம் சரியாக உள்ளது. எனவே, எனக்கு நீங்க செய்ய வேண்டியத செஞ்சா உங்களுக்கு கல்குவாரி அமைக்க அனுமதி கொடுத்திடுவேன் எனச் சொல்லி உள்ளார்.
அதற்கு ஆல்பர்ட் ஸ்ரீதரனிடம் என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு உதவி இயக்குனர் ஸ்ரீதரன் 5 லட்ச ரூபாய் எனக்கு கொடுத்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு பர்மிட் கிடைக்கறதுக்கு ஏற்பாடு பண்றேன். அதுக்கு அட்வான்சா மூணு லட்ச ரூபாயை வரும் வெள்ளிக்கிழமை என் ஆபீசில் வந்து கொடுத்திடுங்க, ஆர்டர் போட்டு கொடுத்ததுக்கப்புறம் மீதி 2 லட்சத்த குடுங்க என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆல்பர்ட், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்து டிஎஸ்பி மணிகண்டன் வசம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மணிகண்டன் ஆலோசனையின் பேரில், ஆல்பர்ட் இன்று 10.2.2023 மதியம் திருச்சி, உதவி இயக்குனர், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் ஆல்பர்ட்டிடம் உதவி இயக்குனர் ஸ்ரீதரன் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ஸ்ரீதரன் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/