திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மணல் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஶ்ரீரங்கம் பகுதியில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற போது சிறுகனூர் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
அதிகாலை நடந்த விபத்து காரணமாக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணல் லாரி மீது மோதியதில் அரசுப் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. விபத்தில் சிக்கிய 2 வாகனங்களும் கிரேன் மூலம் மீட்டு போலீசார் அப்புறப்படுத்தினர்.
இது சென்னை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரியை இணைக்கும் மிக முக்கியமான சாலை என்பதால் இந்த சாலையை மக்கள் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். இரவு நேரத்திலும் இந்த சாலை பரபரப்பாக இருக்கும்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இன்று சென்னைக்கு திரும்ப பல வாகனங்கள் இந்த சாலையில் வந்தன. இதனால் இங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சாலையில்தான் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்களிடையே கேட்டபோது, 'திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக திருச்சி அருகே சிறுகனூர், பாடாலூர் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மிக அதிக வேகமாக செல்கிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடைபெறுகிறது. சில சமயங்களில் உயிர் இழப்புகள் அதிகமாக நடந்துள்ளது. சாலையை கடக்கக் கூட அச்சமாக உள்ளது. ஆகையால் வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்காக நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
குறிப்பாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இரவு பகலாக நேரமில்லாமல் , ஓய்வெடுக்காமல் பேருந்து இயக்கி வருகிறார்கள்.
இதனால் சில சமயங்களில் பேருந்துகள், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. ஆகையால் இவற்றை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“