/indian-express-tamil/media/media_files/2025/01/27/FrBGsB6Rqp0M0smPRqkU.jpeg)
போக்குவரத்துக் காவல் துறையால் கருப்பு பகுதியாக சுட்டிக்காட்டப்படும் திருச்சி-சென்னை பைபாஸ் புறவழிச்சாலையிலுள்ள ஜி- கார்னர் பகுதியில் விரைவில் சுரங்கப்பாதை அமைத்து அதை விபத்தில்லா பகுதியாக மாற்றிட ரயில்வே அதிகாரிகளுடன் திருச்சி எம்.பி துரை வைகோ கலந்தாலோசனை மற்றும் கள ஆய்வு நடத்தினார்.
மதுரை- திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் பகுதியில், சர்வீஸ் சாலை இருவழிப்பாதையாகவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கனரக வாகனங்களும் பேருந்துகளும் உள்ளே வரும் நுழைவுப் பகுதியாகவும் இருப்பதால் தொடர்ந்து விபத்துகள் நடைபெறும் கருப்பு பகுதியாக (Black spot) காவல் துறையால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதியாக ஜி-கார்னர் இருக்கிறது. இதுவரை இங்கு நடைபெற்ற விபத்துகளால் 7 மனித உயிர்கள் பறிபோயுள்ளன. இந்தப் பகுதியில் தினம் தினம் விபத்துகளும், காயங்களும், தப்பித்து உயிர்ப்பிழைப்பதும் வாடிக்கையாக நிகழ்வதை தவிர்ப்பதற்காக, கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் என பலரும் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர்.
தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற சாலையாகவும், பல கல்வி நிறுவனங்களும், தென்னக இரயில்வே - பொன்மலை பணிமனையில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்ற முக்கியமான சந்திப்பாகவும் இந்த சாலை உள்ளது.
பல வருடங்களுக்கு முன்பே இரயில்வேத் துறையும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் கூடி தொடங்கிய இப்பணியில் இரு துறைகளுக்கும் இடையேயான கருத்து முரணால் வேலை தொடங்கப்படாமலேயே கைவிடப்பட்டது.
அதனால் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை இதுவரையும் கேட்பாரற்று இருந்தது. அதற்கு தீர்வு எட்டப்பட்டே ஆகவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கடந்த 11.01.2025 அன்று நடைபெற்ற DISHA இரண்டாவது கூட்டத்தில் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் சுரங்கபாதை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே திருச்சி எம்.பி துரை வைகோ திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை அளித்திருந்ததையும் சுட்டிக்காட்டி பேசினார்.
அதன் அடிப்படையில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்ட இயக்குநர் பிரவீன்குமார் மற்றும் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் கள ஆய்வினை திருச்சி எம்பி துரை.வைகோ மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னா் துரை வைகோ கூறியதாவது; “பொன்மலை ஜி- கார்னர் பகுதியில் மேம்பாலமோ, சுரங்கப் பாலமோ அமைக்க விரைந்து ஏற்பாடு செய்வேன். தேவையான நிலம் வழங்க ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது. நமது கூட்டு முயற்சியால் பொன்மலை ஜி- கார்னர் பகுதியை விபத்தில்லா பகுதியாக மாற்றி மக்கள் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்வோம். ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என இரு தரப்புக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்து இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படும்.
வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் முறையாக விசாரித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். தேவையெனில் நீதிமன்றமே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடும். வேங்கைவயலுக்கு த.வெ.க தலைவா் விஜய் வருவதாக இருந்ததால்தான் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறுவது தவறானது. சம்பவம் தொடா்பான விடியோ, ஆடியோ ஆதாரங்கள் கிடைத்ததின்பேரிலேயே சி.பி.சி.ஐ.டி போலீஸார் செயல்பட்டுள்ளனர். சீமான் விவகாரத்துக்குள் செல்ல எனக்கு விருப்பமில்லை.” இவ்வாறு துரை வைகோ கூறினார்.
இந்தக் களப்பணியின்போது ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்ல மண்டி சோமு, புறநகர் வடக்கு மணவை தமிழ்மாணிக்கம், புறநகர் தெற்கு டி.டி.சி. சேரன் உள்ளிட்ட ம.தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.