/indian-express-tamil/media/media_files/2025/01/04/XCUBfoA5S6gNncQR3n8q.jpg)
திருச்சி சர்வதேச விமான நிலைய வளர்ச்சி ஆலோசனை கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், விமான நிலைய இயக்குனர் (பொ) கோபால கிருஷ்ணன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் துரை வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "அமீரக நாடுகளுக்கு விமான சேவை இருந்தாலும் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் விமான சேவைகள் குறைவாக உள்ளது.
வெளிநாடுகளுக்கான விமானத்தை இங்கு இயக்குவதற்கான அனுமதி கிடையாது. இந்திய விமான நிறுவனங்கள் சேவையும் கூடுதலாக செய்வதில்லை. எனவே, கட்டணம் கூடுதலாக உள்ளதால் பயணிகள் பெங்களூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அமீரக விமானங்களுக்கான அனுமதி வழங்க வேண்டும் அல்லது கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சருடன் பேசி உள்ளேன். விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், அமீரக நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.
சுங்கத்துறை அதிகாரிகள், அதிகமாக பயணம் செய்பவர்களை தனியாக தடுத்தும், அத்துமீறல் செய்வதும் மனக்கசப்பை ஏற்படுத்தும். குற்றவாளி அல்லாத நபரை குற்றவாளி கூண்டுக்குள் வைத்து அசிங்கப்படுத்தும் போது சங்கடத்தை உருவாக்குகிறது.
இது திருச்சி விமான நிலையத்தில் பெரிய பிரச்சனையாக, பேசும் பொருளாக உள்ளது. இச்சம்பவஙக்ள் தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
செய்தி - க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.