சிறு, குறு நிறுவன உரிமையாளர்கள் இடையே தமிழக அரசு பிரிவினையே ஏற்படுத்துகிறது என கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறு, குறு நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மின் நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மட்டுமல்லாது, கரூர், திருப்பூர், கோவை, தஞ்சை, குடந்தை என தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் சிறுகுறு நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/12e1d553-1ac.jpg)
பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை சிறு, குறு தொழில்துறை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு நிலை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது, அதேபோன்று பீக் ஹவர்ஸ் கட்டணத்தையும் 15 சதவீதம் தமிழக மின்வாரியம் உயர்த்தி அறிவித்துள்ளது. அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளதுடன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக மின்வாரியம் சார்பாக உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், பீக் ஹவர்ஸ் கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மல்டி இயர் டாரிப் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு மற்றும் மின்சார வாரியத்தின் இந்த தொழில் விரோத நடவடிக்கையை கண்டித்தும் இன்றைய தினம் தமிழக முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/1fc1cdcc-2f5.jpg)
திருச்சி மாவட்டத்தில் அரியமங்கலத்தில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் நிறுவனம் மற்றும் திருவெறும்பூர் மற்றும் துவாக்குடியில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் நிறுவனங்கள், வாழவந்தான் கோட்டை தொழில் நிறுவனங்கள் என பல இடங்களில் இன்றைய தினம் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தத்தம் உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறு, குறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில்; ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் மீள முடியாமல், பழைய உற்பத்தியை மீட்டு எடுக்க முடியாமலும், தொழிலாளர்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பினை கொடுக்க முடியாத நிலையிலும் இருக்கின்றனர். சிறு, குறு தொழிலை வளர்க்கச் சொல்லும் அரசு ஒருபுறம் மின் கட்டண உயர்வை அறிவித்து வருவதால் சிறு, குறு நிறுவனங்கள் லாப நோக்கோடு உற்பத்தியை பெருக்கவும் முடியவில்லை, தொழிலை வளர்க்கவும் முடியவில்லை.
கடன் வாங்கி தொழில் செய்யும் எங்களுக்கு இது போன்று கட்டண உயர்வால், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு இதுபோன்று கட்டண உயர்வு அறிவித்துள்ளதை நிறுத்தினால் தான் நாங்கள் தொழிலாளர்களுக்கு ஓவர் டைம் கொடுத்து தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க வாய்ப்பு இருக்கின்றது என்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/fe46d8fd-ce1.jpg)
மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உற்பத்தி பொருட்கள் செய்யக்கூடிய சிறு, குறு நிறுவனங்கள் இன்று கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும், இன்று உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு உற்பத்தி பணியில் ஈடுபடாத நிறுவனங்களுக்கு உற்பத்திக்கான ஆர்டர் தொடர்ந்து வழங்கப்படாது என மிரட்டுவதால் சிறு, குறு நிறுவன உரிமையாளர்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு செயல்படுகிறது என்றனர்.
திருச்சியில் சிறுகுறு நிறுவனங்கள் இன்று தங்கள் உற்பத்தியை நிறுத்தி தொடரும் போராட்டத்தால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பும், நிறுவனங்களுக்கு பல கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“