ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில், சமயபுரம் மாடக்குடி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவருமான சேகர், கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்சி குமார் என்கிற குமார் இளையராஜா, திருச்சி புத்தூர் பாரதி நகர் 11வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், திமுக பிரமுகருமான ஜான்சன்குமார், இருங்கலூர் தெற்கு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நாட்டாமை என்கிற நடராஜன், சேலம் சங்ககிரி வன்னியர் காலடியைச் சேர்ந்த சரவணகுமார், பிச்சாண்டார்கோவில் தச்சர் தெருவை சேர்ந்த கனகராஜ், துவாக்குடி அண்ணா நகர் மனோகர், அரியலூர் உடையார்பாளையம் மேல தெருவை சேர்ந்த சுரேஷ், அரியலூர் ஜெயங்கொண்டம் நடராஜ்நகர் ராஜி என்கிற செல்வம், திருவையாறு மேல புனவாசல் பகுதியைச் சேர்ந்த பால் எமர்சன், பிரசன்னா, கடலூர் காட்டுமன்னார்கோவில் உத்தர சோலை பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், கரூர் ஆதி விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜா, சமயபுரம் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோரை சமயபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆச்சிகுமாரின் அண்ணன் மகனை, சேகர் ஏற்கனவே கொலை செய்த நிலையில், பழிக்கு பழியாக சேகரை கொலை செய்தது தெரியவந்தது. அதனடிப்படையில் மேற்கண்ட நபர்களை சமயபுரம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில், இளையராஜா, திருச்சி மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜான்சன் குமார் நாட்டாமை என்கிற நடராஜன், கனகராஜ், ஹரி கிருஷ்ணன், செந்தில் ஆகிய ஆறு பேருக்கு ஆயுல் தண்டனையும், தலா 2000-ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான குமார், ராஜா ஆகிய இருவரும் இறந்து விட்டனர். மேலும், நான்கு பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு வக்கீலாக பாலசுப்பிரமணியம் வாதாடினார்.
கொலை வழக்கில் திமுக பிரமுகர்கள் உட்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திமுக பிரமுகரான ஜான்சன்குமார் மீது லால்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 207 முறை பத்திரப்பதிவு செய்த குற்றச்சாட்டும் உள்ளது, அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி என்பதால் கட்சி நிகழ்ச்சிகளில் பெருமளவு ப்ளக்ஸ் வைத்ததால் ப்ளக்ஸ் ஜான்சன்குமார் என திமுகவினரால் அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“