/indian-express-tamil/media/media_files/PxaN76KmDfOYX64J9rOo.jpg)
பட்டா கொடுக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற முசிறி துணை வட்டாட்சியர் கைது; கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை
திருச்சி மாவட்டம் முசிறியில் கோபால் என்பவரின் மகன் கிருஷ்ணன் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும், ஒரு காலியிடமும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய்த்துறையில் இருந்து பட்டா பெறப்படவில்லை. அதனால் கிருஷ்ணன் தனது தாயார் பெயரில் மேற்படி இரண்டு இடத்திற்கும் பட்டா பெறுவதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த பிப்ரவரி 2023 மாதத்தில் மனு செய்துள்ளார்.
தனது பட்டா சம்பந்தமாக கிருஷ்ணனுக்கு எந்த தகவலும் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிடைக்கப் பெறாதால் கிருஷ்ணன் முசிறி கிழக்கு பகுதி வி.ஏ.ஓ அலுவலகம் சென்று வி.ஏ.ஓ விஜயசேகரை சந்தித்து தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு வி.ஏ.ஓ விஜய சேகர் உங்க இடத்தை மண்டல வட்டாட்சியர் வந்து பார்வையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்பின்னர் நவம்பர் மாதத்தில் வி.ஏ.ஓ ராஜசேகர் முசிறி மண்டல வட்டாட்சியர் தங்கவேலை அழைத்துக் கொண்டு கிருஷ்ணனின் இடத்தை பார்வையிட்டு விட்டு, தாலுக்கா அலுவலகம் சென்றவர்கள் கிருஷ்ணனை அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர்.
அதன் பேரில் கிருஷ்ணன் நேற்று 26.12.2023 மாலை 6 மணி அளவில் முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்று மண்டல வட்டாட்சியர் தங்கவேலை சந்தித்து தனது பட்டா குறித்து கேட்டுள்ளார். அப்போது மண்டல வட்டாட்சியர் தங்கவேல் கிருஷ்ணனிடம் உங்களது இரண்டு இடத்திற்கும் பட்டா பெற்று தருவது என்றால் ஒரு பட்டாவுக்கு 15,000 வீதம் இரண்டு பட்டாவுக்கும் முப்பதாயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் எனக் கறாராக கேட்டுள்ளார்.
கிருஷ்ணன் தொகையை குறைத்து கூறுமாறு மண்டல வட்டாட்சியரிடம் கேட்டதன் பேரில் மண்டல வட்டாட்சியர் 5000 குறைத்துக் கொண்டு ரூ.25000 கொடுத்தால்தான் பட்டா பெற்றுத்தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் லஞ்சம் கேட்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் வசம் புகார் அளித்தார். புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்று 27.12.2023 மாலை 5:30 மணி அளவில் மண்டல வட்டாட்சியர் தங்கவேல் லஞ்சப்பணம் ரூ.25,000 ரொக்கத்தை கிருஷ்ணனிடமிருந்து பெற்றபோது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மண்டல வட்டாட்சியர் தங்கவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் வட்டாட்சியர் ஒருவர் லஞ்சப் பணம் பெற்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.