க.சண்முகவடிவேல்
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இன்று இரவு 'வென்றாக வேண்டும் தமிழ்' என்ற தலைப்பில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் பொதுக்கூட்டம், திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியது பின்வருமாறு:-
அ.தி.மு.க-வின் மாநாடு கட்சியினரை உற்சாகப்படுத்தவும், கட்சி எடப்பாடி பக்கம் வந்து விட்டது என்பதை காட்டுவதற்கும் பயன்பட்டுள்ளது. அது அக்கட்சியினரை உற்ச்சாகப்படுத்துவதற்கான மாநாடு. அது வேறு எந்த மாற்றத்தையும் எற்படுத்திவிடவில்லை.
தமிழ்நாட்டில் புரட்சித் தமிழன் அண்ணன் நடிகர் சத்யராஜ் மட்டும் தான். மரியாதை நிமித்தமாக 'ர்' சேர்த்து எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் என பட்டம் கொடுத்துள்ளனர். தமிழர்களிடம் புரட்சி என்கிற சொல் மிகவும் கேவலப்பட்டு விட்டது. எடப்பாடிக்கு பட்டம் கொடுத்திருக்கிறார்கள். நாமும் அவரை வாழ்த்துவோம்.
உங்கள் கொள்கையோடு ஒத்துப் போகிறோம் என்று யாராவது எங்களிடம் வரட்டும். அப்போது கூட்டணியை பற்றி பேசி முடிவெடுப்போம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் பாதுகாப்பு இல்லை. கொடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக 6 பேர் கொலைகள் நடந்துள்ளன. அதனை ஏன் இன்னும் கண்டுபிடித்து வெளியே கொண்டு வரவில்லை. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னை கர்நாடகாக்காரன் என்று பெருமையோடு பேசியுள்ளார். அவர் அந்த மாநிலத்திற்கு தலைவராக போகட்டும்.
நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி தான் கொண்டு வந்தது. அது பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் என்பதை கணித்து அதனை அன்றே தடுத்து இருக்க வேண்டும்.
மருத்துவம் தான் கல்வி என்று மாணவர்களின் மனதில் பதிய வைப்பது தவறு. கல்வியில் மருத்துவமும் ஒன்று என மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மருத்துவம் படித்த தமிழர்கள் உலகம் முழுவதும் மருத்துவத் துறையில் மேதைகளாக உள்ளனர். அவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதாமல் வந்தவர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.