திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமைச்சர் கே.என். நேரு இன்று காலை பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகரான அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட இந்த பிரமாண்டமான பேருந்து முனையம், 38 ஏக்கர் பரப்பளவில் ரூ.408.36 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது.

பேருந்து முனையத்தின் சிறப்பம்சங்கள்:
தரைத்தளத்தில் 345 வெளியூர் பேருந்துகளும், முதல் தளத்தில் 56 உள்ளூர் நகரப் பேருந்துகளும் என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகளுக்கான வசதிகள்: 20 தேநீர்க் கடைகள், 12 உணவகங்கள், 10 சிற்றுண்டிக் கடைகள், சுத்தமாகப் பராமரிக்க 228 துப்புரவுப் பணியாளர்கள், பயணிகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கு 52 காவலர்கள், ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைக்கான ஏற்பாடுகள், பயணிகளுக்கு உதவ 30 தன்னார்வலர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்காக 3 பேட்டரி வாகனங்கள், அவசரத் தேவைக்காக மருத்துவர் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 9 ஆம் தேதி இந்த முனையத்தைத் திறந்து வைத்த போதிலும், இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு, இயக்குதல் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் ஏற்பாடுகள் காரணமாக பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, இந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு முனையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேருந்து வழித்தடங்கள்:
புதிய முனையத்திலிருந்து வெளியூர் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன:
-
சென்னை, திருப்பதி, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி மார்க்க பேருந்துகள்: திருச்சி நோக்கி உள்வரும்போது நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்துக்கு வந்து, மீண்டும் அதே வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும்.
-
தஞ்சாவூர் மார்க்க பேருந்துகள்: திருச்சி நோக்கி உள்வரும்போது பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முனையத்துக்கு வந்து, மீண்டும் அதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும்.
-
நாமக்கல் மார்க்க பேருந்துகள்: பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்துக்கு வந்து, மீண்டும் அதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும்.
-
புதுக்கோட்டை மார்க்க பேருந்துகள்: டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் சென்று, மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.
-
கரூர் மார்க்க பேருந்துகள்: மாவட்ட நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம், வ.உ.சி சாலை, மத்திய பேருந்துநிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முனையம் சென்று, மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.
-
மணப்பாறை மார்க்க பேருந்துகள்: திருச்சி நோக்கி உள்வரும்போது கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் சென்று, மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.
-
மதுரை மார்க்க பேருந்துகள்: தேசிய நெடுஞ்சாலையிலேயே பஞ்சப்பூர் வழியாக பேருந்து முனையம் சென்று, மீண்டும் அதே வழித் தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.
மத்தியப் பேருந்து நிலையம் வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் வந்து செல்ல வேண்டும். அனைத்துப் பேருந்துகளும் முனையத்துக்கு உள்வரும்போது காவல் சோதனைச் சாவடி எண்.2 வழியாகச் சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வர வேண்டும். முனையத்திலிருந்து வெளிச்செல்லும் அனைத்துப் பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பிச் செல்ல வேண்டும்.
ஆம்னி பேருந்துகளுக்கான தற்காலிக ஏற்பாடு:
பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் வரை, தற்போதுள்ள புதிய பேருந்து முனையத்திற்கு அருகிலேயே தற்காலிகமாக காலி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்.