மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்.ஐ.டி கல்லூரி இந்தியாவில் உள்ள என்.ஐ.டியில் முதலிடத்தில் உள்ளது. இங்கு தமிழகம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பொறியியல், வணிக மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவரிடம் எலக்ட்ரிஷன் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இந்தக் குற்றச்சாட்டின் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அசட்டையாக இருந்ததால், என்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் விடிய விடிய கல்லூரி நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரச்சினை ஓய்ந்த நிலையில் மீண்டும் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி மற்றொரு பிரச்னை வெடித்தது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு எம்.சி.ஏ படிக்கும் மாணவி ஓஜஸ்வி குப்தா நான்கு பக்க கடிதங்களை எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த மாணவி தனது படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியாமலும், தேர்வு பயத்தினாலும், உடன் படிக்கும் சீனியர் மாணவர்களின் கேலி கிண்டல்களால் நான் கல்லூரியை விட்டு மாயமாகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றார்.
இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் துவாக்குடி போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடி வருகின்றனர். தமிழக காவல்துறையில் இது குறித்து நீண்ட நாட்களாக எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலை நீடிக்கின்றது. இதுவரை அந்த மாணவி எங்கு சென்றார், எப்படி இருக்கிறார் என்ற விபரம் கிடைக்காத நிலை தொடர்கிறது.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி ஒஜஸ்வி குப்தா, ஒரு கடிதம் எழுதிவைத்துள்ளார்.
அந்த கடிதம் பாதி ஆங்கிலத்தில் பாதி ஹிந்தி மொழியிலும் உள்ளது. அதில் தான் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் படித்து வருவதாகவும்அந்த கல்வி நிறுவனத்தில் வகுப்பிற்கு தன்னை லீடராக நியமித்துள்ளனர். அதை நிர்வகிப்பதில் சிரமம் இருக்கிறது. சீனியர் எல்லாம் இருக்கும்போது ஜூனியர் ஆன தனக்கு அந்த பொறுப்பை வழங்கியதை சீனியர்கள் ஏற்றுக் கொண்டது போல் தெரியவில்லை இங்கு நாம் ஆளுமையுடன் இருக்க வேண்டுமென்றால் அதற்கு உரிய வசதி மற்றும் பின்புலம் இருக்க வேண்டும் என கருதுவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒஜஸ்வி குப்தா கல்லூரியை விட்டு வெளியே சென்றபோது கையில் ஒரு சிறிய பையுடன் மட்டுமே சென்றுள்ளார். மேலும் சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பேருந்தில் ஏறி சென்றுள்ளார். அவரது செல்ஃபோன் கல்லூரி விட்டு வெளியே வந்தவுடன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இதுவரை ஆன் செய்யப்படவில்லை. மேலும் அவரது வங்கி கணக்கில் காணாமல் போன அன்று இருந்த தொகை எவ்வளவு இருந்ததோ அந்த தொகை இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவர் வெளிநாடு செல்ல வாய்ப்பு இல்லை. அவரது கால் ஹிஸ்டரியை பொருத்தவரை அவர் பெற்றோரிடமே அதிக நேரம் பேசி உள்ளார்.
மேலும் காதல் விவகாரத்தினால் வெளியே சென்றுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த போது அவருக்கு காதலன் இருந்ததாக இதுவரை தெரியவில்லை. அவர் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் தேர்வு பயத்தினால் மட்டுமே அவர் வெளியே சென்று இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வருகின்றது. இந்நிலையில் போலீசார் மாணவியின் புகைப்படம் மற்றும் அடையாளத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து உள்ளதாகவும் அதே போல் பேருந்து டிப்போவிற்கு அனுப்பி வைத்து டிரைவர் கண்டக்டர் மூலம் அடையாளம் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் மாயமான மாணவி ஒஜஸ்வி குப்தாபற்றி எந்த வித தகவலும் துவாக்குடி போலீசாருக்கு இதுவரை கிடைக்கவில்லை.
இதன் காரணமாக போலீசார் என்ன செய்வதென்று புலம்பி வரும் வேலையில் அவரது பெற்றோர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள எம்.பி., மேயர் மூலமாக மத்திய பிரதேச முதல்வரை நேரில் சந்தித்து தங்களது மகள் ஒஜஸ்வி குப்தா, தமிழகத்தில் உள்ள திருச்சி என் ஐ டி கல்லூரியில் எம் சி ஏ படிப்பதற்காக சென்றவர் மாயமாகி 15 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் ஒஜஸ்வி குப்தா பற்றி எந்தவித தகவலும் தெரியாத நிலையில் ஒஜஸ்வி குப்தாவை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு அளித்துள்ளதால் தமிழக போலீஸாருக்கு அழுத்தம் அதிகரித்திருக்கின்றது.
இத்தகைய சூழலில், திருச்சி என்.ஐ.டி யில் மாணவி ஒருவர் அளவுக்கு அதிகமான பாரசிட்டாமல் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுஜய் சிதி (18) என்ற மாணவி திருச்சி என்ஐடி கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டிடக்கலை பயின்று வருகிறார். அவர் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததாலும் ஆர்க்கிடெக்சர் படிப்பின் மீது விருப்பம் இல்லாததால் நேற்று முன்தினம் விடுதியில் அளவுக்கு அதிகமான பாரசிட்டாமல் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அடுத்து சக மாணவிகளால் மீட்கப்பட்டு அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அங்குள்ள சக மாணவர்களிடம் கேட்டபோது இதுபோல் அடிக்கடி அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் மாணவ மாணவிகள் ஈடுபடுவது என்பது அடிக்கடி நடைபெறுகின்ற சம்பவம்தான். வெளி மாநில மாணவர்கள் என்பதால் திருச்சி என்.ஐ.டி.நிர்வாகம் பெரிதளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றனர்.
திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவி மீது பாலியல் சீண்டல், மாணவர்களின் போராட்டம், மாணவி மாயம், மாணவி தற்கொலை முயற்சி என கடந்த மாதத்தில் மட்டும் இப்படி அடுத்தடுத்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்; வெளி மாநிலங்களில் இருந்து திருச்சி என்.ஐ.டி.யில் தங்கி படிக்கும் மாணவர்கள் அதிகம். அதேநேரம் கல்லூரிக்கான விடுதிகளும் ஒரே கேம்பஸில் தூரம் தூரமாக இருக்கின்றன. இந்த இடைவெளிக்குள் வெட்டவெளியும் இருக்கின்றன. மாணவ, மாணவிகள் தங்களின் மகிழ்வுக்காக அவ்வப்போது தங்களுக்கு ஒத்துப்போகிறவர்களுடன் வெளியே சென்றும் வருகின்றனர்.
கலாச்சார சீர்கேடும் இங்கே அரங்கேறியிருக்கின்றது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு என்.ஐ.டி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம் என்று கருத்து தெரிவிக்கின்றனர் இதுதொடர்பாக என்.ஐ.டி. நிர்வாகத்தினை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அலைபேசிக்கு எந்தவித பதிலும் இல்லை என்பதுதான் வேதனை.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.