/indian-express-tamil/media/media_files/2025/06/21/whatsapp-image-trichy-2025-06-21-11-27-18.jpeg)
Trichy
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர்களான பேரூர் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை, திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, மாவட்ட செயலாளர்கள் வைரமணி மற்றும் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏவிடம் வழங்கினார்.
கூட்டத்தின் முக்கிய அம்சமாக, அமைச்சர் கே.என். நேரு திமுக நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அப்போது அவர், "திமுக மீண்டும் ஆட்சி அமைக்காது, நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என சிலர் கூறி வருகின்றனர். ஆனால், எள் முனை அளவு கூட சந்தேகமில்லை, மீண்டும் திமுகதான் ஆட்சியமைக்கும். யார், யாருடன் கூட்டணி வைத்தாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. துணிச்சலாக நாம் தேர்தலை சந்திக்க உள்ளோம்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வகுத்துள்ள வியூகங்கள் குறித்தும் விளக்கினார். "ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களில் 30 சதவீதத்தினரை திமுகவின் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என திமுக தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே நாம் தொகுதிக்கு 20 சதவீதம் பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். திமுகவினர் தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் நேரு எடுத்துரைத்தார். குறிப்பாக, "பெண்களுக்கு என நிறைய திட்டங்களை நம் முதல்வர் அறிவித்து, செயல்படுத்தியும் உள்ளார். இந்த திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இதனால் அவர்களின் வாக்கு திமுகவுக்கு பக்கபலமாக இருக்கும்" என்று கூறினார்.
இந்தக் கூட்டத்தில் மாநகர செயலாளர் மற்றும் மாநகர மேயர் மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் ஸ்டாலின் குமார், கதிரவன், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.