திருச்சி மாவட்டம் துறையூரில், சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தினசரி மதிய உணவிற்காக தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான விலையில்லா முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் அருகில் பிரபல தனியார் உணவகம் இயங்கி வருகிறது. அந்த உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் தடையின்றி மிக குறைந்த விலையில் ரூபாய் இரண்டுக்கு கொள்முதல் செய்யப்பட்டு, ஆம்லேட் உள்பட பல்வேறு விதமான உணவுகள் விற்கப்பட்டு வருகின்றது.
கடைக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து முட்டை, பாமாயில், அரிசி, பருப்பு உள்பட பொருட்களை அந்த தனியார் உணவகத்திற்கு தினந்தோறும் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்து சத்துணவு முட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அந்த உணவகத்திற்கு சீல் வைத்து முட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தனியார் உணவகத்திற்கு சத்துணவு முட்டைகளை விற்றது யார் என்று விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். சத்துணவு முட்டைகள் புதுவெளியில் விற்பனைக்கு வந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“