திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை சேர்ந்தவர் முத்தாத்தாள். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான வீட்டை 16 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி உள்ளார். முன்பணமாக ரூ.6 லட்சமும், அதனைத் தொடர்ந்து ரூ.2 லட்சமும் என மொத்தம் ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.8 லட்சம் ரூபாயை பத்திரப்பதிவு அலுவலகத்தில் செலுத்தி அந்த வீட்டை பதிவு செய்வதற்காக சென்றபோது, ஏற்கனவே, அந்த வீட்டின் மீது வங்கியில் கடன் பெற்றுள்ளது தெரியவந்தது.
எனவே, முத்தாத்தாள் தனக்கு வீடு வேண்டாம் என்று கூறி பெற்றுக்கொண்ட அட்வான்ஸ் தொகையை திருப்பி தருமாறு முருகானந்தத்திடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி சுமார் ஆறு வருட காலமாக பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், புகார் மட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த முத்தாத்தாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின்னர், ஆட்சியர் பிரதீப்குமார் மூதாட்டியிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“